கர்நாடக பிலிம் சேம்பர் மீதான கோபத்தில் டைட்டில் வைத்தார் உபேந்திரா..!

அதிரடிக்குப் பெயர்போன உபேந்திரா யாரென்று தெரியாதவர்களுக்கு.., விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தில் மிரட்டல் போலீஸ் ஆஃபிஸராக வந்தாரே அவர்தான் இவர். இங்கே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்களான அஜித்தின் ‘வரலாறு’, லாரன்ஸின் ‘காஞ்சனா’ ஆகியவற்றின் கன்னட ரீமேக்குகளில் நடித்து கடந்த 2012ல் செமத்தியான கல்லா கட்டியவரும் இவரேதான்.

கன்னட திரையுலகில் உபேந்திரா நடிக்கிற படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஒரு பரபரப்பு கிளம்பும். காரணம் அவருடைய ஆக்‌ஷனும் காமெடியும் அந்தமாதிரி ரணகளமாக இருக்கும். அதேமாதிரி அவர் வசனம் பேசுகிற ஸ்டைலை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

இப்போது ‘உப்பி-2’ என்கிற படத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார்.. அதென்ன ‘உப்பி-2’ என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். 1999ல் இவர் நடிப்பில் வெளியான ‘உபேந்திரா’ என்கிற சைக்காலஜிகல் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.

‘உப்பி-2’வுக்கான பெயர்க்காரணம் ஓகே.. அனால் முதல் பாகத்திற்கு தன் பெயரான ‘உபேந்திரா’வையே ஏன் டைட்டிலாக வைத்தார் என்ற கேள்வியும் உங்களுக்குள் எழும்.. அதற்கும் காரணம் இருக்கிறது. அந்தப்படத்திற்கு முதலில் அவர் வைத்திருந்த டைட்டில் ‘நானு’.

ஆனால் கர்நாடக பிலிம் சேம்பரில் இந்தப்பெயரை பதியச்சென்றபோது இதே பெயரில் வேறு ஒருவர் பதிந்துள்ளதாக உபேந்திராவுக்கு பதில் கூறினார்களாம். சம்பந்தப்பட்டவரும் அந்த டைட்டிலை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டாராம். அதனால் கோபத்தில் ‘நானு’ அதாவது நான் என்ற அர்த்தம் தருவதால் அவரது பெயரான ‘உபேந்திரா’வையே வைத்துவிட்டார். படமும் சூப்பர்ஹிட்.

இதோ இப்போது 15 வருடங்கள் கழித்து அதே மாதிரி கிண்டலான டைட்டிலுடன் இரண்டாம் பாகமாகவும் எடுத்து வருகிறார் உபேந்திரா.. 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திமுடித்துவிட்டு தற்போது எடுத்தவரை படம் எப்படி வந்திருக்கிறது என பார்ப்பதற்கு எடிட்டிங்கில் உட்கார்ந்திருக்கிறார். ஆரம்பத்திலேயே சொன்னதுபோல அதிரடிக்கு பெயர்போனவர் தான் உபேந்திரா என்பதை அவர் இந்தமுறையும் நிரூபித்துள்ளார்.

UpendraVishalஉபேந்திராசத்யம்விஷால்