இயக்குனர் பா.ரஞ்சித் மூலம் ‘மெட்ராஸ்’ படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் உமாதேவி. அதில் இவர் எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியை தமிழ் திரைப்பாடல் உலகில் கவனிக்கத்தக்க பாடலாசிரியராக மாற்றியுள்ளது.
தற்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, அதுமட்டுமல்ல கதையின் நாயகிகளாகவும் நடித்து வருகின்ற த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார் உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார் உமாதேவி.
‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதே ஜிப்ரான் இசையில் ‘அறம்’ மற்றும் கோவிந்த் மேனன் இசையில் ’96’ படப்பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார் உமாதேவி.
“அறம்” படத்தில் இடம்பெற்றுள்ள, “புது வரலாறே புற நானூறே” மற்றும் “தோரணம் ஆயிரம்” பாடல்களும் வெளியானதில் இருந்து அதன் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிக்கிறார், உமாதேவி.
இன்னொரு ஸ்பெஷல் நியூஸ் என்னவென்றால் மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் ஹாட்ரிக் ஹிட் அடிக்க இருக்கிறார். மெட்ராஸ், கபாலி, படங்களைத் தொடர்ந்து ‘காலா படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் உமாதேவி.