த்ரிஷா திரையுலகிற்குள் நுழைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இன்னும் கதாநாயகியாகவே அவர் நிலைத்து நிற்பதும் அன்று பார்த்த அதே இளமையான தோற்றத்துடன் இருப்பதும் த்ரிஷா வாங்கி வந்த வரம்.. கடந்த சில வருடங்களாகவே த்ரிஷாவின் திருமணம் எப்போது என்கிற கேள்வியும் அவர் யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்துகொண்டுதான் இருந்தன.
அதுகுறித்து பல வதந்திகள் அந்தந்த சமயங்களில் உலாவந்தாலும் இதில் கடைசியாக தயாரிப்பாளர் வருண் மணியனை அவர் திருமணம் செய்யப்போவதாக சொல்லப்பட்டது. இந்த செய்திக்கு அந்த நேரத்தில் வழக்கம்போல த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் பல இடங்களுக்கு அவர்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு யூகங்களை கிளப்பின.
கடைசியில் பூனைக்குட்டி வெளியேவந்துவிட்டது கதையாக இப்போது தனது திருமணம் குறித்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் த்ரிஷா. அவர் மணக்க இருப்பது தயாரிப்பாளர் வருண் மணியனைத்தான். இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி-23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணம் எப்போது என்கிற தேதி குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என அதில் கூறியுள்ளார் த்ரிஷா.