மருத்துவம் படிக்க முடியவில்லையே என்கிற விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திரையுலகினர் அனைவரும் தங்களது இரங்கல்களையும் அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.. நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர் ஒருபடி மேலே போய் அரசுக்கு எதிரான தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர்.. இந்த சந்திப்பின்போது சிம்புவின் ‘சரஸுடு’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட டி.ராஜேந்தர், அப்படியே அனிதா தற்கொலை விவகாரம், நீட் தேர்வு, அதிமுக பொதுக்குழு என அரசியல் பக்கம் திரும்பி அனல் பறக்கும் கருத்துக்களையும் தெரிவித்தார்.
அம்மா (ஜெயலலிதா). இருக்கும் வரை நீட் தேர்வை தமிழ்நாட்டு பக்கம் அனுமதிக்கவில்லை.. காரணம் இப்படி அனிதா போல ஒரு மாணவி தனது உயிரை இழந்துவிட கூடாது என்பதற்காக.. அடித்தட்டுமக்கள், ஏழை மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக, கனவாக போய்விடும் என்பதால் தான் தொடர்ந்து நீட்டை எதிர்த்தார்.. .
ஆனால் இன்று நீட்டின இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.. யாராலோ ஆட்டுவிக்கப்படும் பொம்மை ஆட்சி… நீட் தேர்வை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டவர்கள் தான் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்பதைக் நாடகமாடுகிறார்கள்.
இந்த போலியான அரசியல்வாதிகளை மக்கள் நம்பவில்லை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எல்லாவற்றிலும் மாணவர்களும், இளைஞர்களும் தான் களமிறங்கி போராடுகிறார்கள். பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிராக குரல் கொடுத்த மகளிர் அமைப்புகள் அனிதா விவகாரத்தில் வாய்மூடிக்கொண்டு இருப்பது ஏன்..?” என சராமரியாக கேள்விகளை எழுப்பினார் டி.ராஜேந்தர்.