கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா ஆகியோர் நடித்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘தோழா’.. பி.வி.பி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு கார்த்தி படித்த படித்த பள்ளியில் வைத்து அமர்க்களமாக நடைபெற்றது..
தமிழுக்கு கார்த்தி, தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் என மும்மொழி சங்கமத்தால் சந்தோஷத்தில் விழா அரங்கமே திணறியது.. இந்த விழாவில் ‘தோழா’ படத்தின் பாடல்களுக்கு நடன குழுவினர் நடனமாடியதுடன், கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா இவர்களின் படங்களில் இருந்து சில பாடல்களை கலவையாகி அதற்கும் நடனம் ஆடி அவர்களை மேடைக்கு வரவேற்றார்கள்..
விழாவில் சிவகுமார், சூர்யா, கலைப்புலி தாணு, இயக்குனர் சுதா கொங்கரா, மனோபாலா, சந்தான பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கார்த்தி, இந்தப்படத்தின் மூலம் நாகார்ஜுனா தனக்கு புதிய தோழனாக கிடைத்தது குறித்து பெருமைப்பட்டார்.
தமன்னாவும் இயக்குனர் வம்சியின் நட்பு குறித்து பாராட்டி பேசினார்.. பாடலாசிரியர் மதன் கார்க்கியும் தமன்னாவும், இசையமைப்பளார் கோபிசுந்தரை அப்போது தான் முதன்முதலாக பார்ப்பதாக கூறி அவரை கிண்டலடித்தார்கள்..
விழாவின் இறுதியில் பேசிய நாகார்ஜுனா கார்த்தியுடன் நடித்தது நல்ல அனுபவம் என்றார்.. தெலுங்கில் பேசினாலும், சென்னை மற்றும் தமிழ்சினிமா பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். வரும் மார்ச் மாதம் இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.