கிடை போட்டு வெட்டவெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பி.மாரிமுத்து.
ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாராயம் இவற்றுக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி.
இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ… இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு மேலும் சோத்துமுட்ட, ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி. மாரிமுத்து
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றை திரையிட்டு காட்டினார்கள். கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மேற்கு தொடர்ச்சி மலை’ போல இந்தப்படமும் ரசிகர்கிடம் வரவேற்பை பெரும் என்றே நினைக்க தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையை பெற்ற திருக்குமரன் என்டர்டெய்ன்மென் சி.வி.குமார் இந்தப்படத்தை வெளியிடுவதை பார்க்கும்போது அது இன்னும் இரட்டி நம்பிக்கையை தருகிறது.