தொப்பி – விமர்சனம்

களவாடுதலையே குலத்தொழிலாக கொண்ட பழங்குடியின மக்கள் கூட்டத்தில் இருந்து, தங்கள் மீதுள்ள திருடர் முத்திரையை மாற்றவேண்டும் என்பதற்காகவே, போலீஸ் ஆகவேண்டும் என்கிற லட்சிய வெறியுடன் அதற்கான படிப்பு, தேர்வு என குறிக்கோளுடன் இருக்கிறார் வாலிபரான முரளிராம்.

அதனாலேயே அந்த கிராமத்து போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸுக்கு போலீஸ் இன்பார்மர் வேலை பார்ப்பதன் மூலம் உதவி செய்து, அவரின் நன்மதிப்பையும் பெற முயற்சிக்கிறார். ஆனால் அருள்தாஸுக்கோ பழங்குடி இனத்தை சேர்ந்த முரளி அதிகாரத்திற்கு வருவது பிடிக்கவில்லை.

இதற்கான சமயம் பார்த்து காத்திருக்கும் அருள்தாஸ், போலீஸ் ட்ரெய்னிங்கில் கிட்டத்தட்ட தேர்வாகும் நிலைக்கு வந்துவிட்ட முரளியின் மீது, எப்போதோ கோபத்தில் அவரது தாய்மாமன் ஜி.எம்.குமாரை தாக்கியதாக ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி போலீஸ் வேலை கிடைப்பதற்கும் உலை வைக்கிறார்.

மேலும் தடைசெய்யப்பட்ட இயக்க தலைவர் ஒருவருக்கு உதவியதாக முரளியின் முறைப்பெண் ரக்சா ராஜ் மீது வழக்கு தொடுக்க முயற்சிக்கிறார் அருள்தாஸ். ரக்சாவுக்கு பதிலாக மீண்டும் லாக்கப்பிற்குள் செல்லும் முரளியால் தனது லட்சியத்தை எட்ட முடிந்ததா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

தேனி – கேரள எல்லைப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் ஒன்றின் காவல் நிலையத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் வந்த சில மாதங்களிலேயே மர்மமான முறையில் இறப்பதாக, கதையை ஆரம்பிக்கும்போதே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். எழுச்சியுள்ள, லட்சிய வெறிகொண்ட பழங்குடி இளைஞனாக நடித்திருக்கும் முரளி ராம் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு.. படம் முழுவதும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அவரை இந்தப்படம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது என்றே சொல்லலாம்.

அவர் மட்டுமா, படம் முழுவதும் வில்லத்தனதுடன் சகுனி போலீஸாக நடித்திருக்கும் அருள்தாஸ், திருட்டுத்தொழிலின் குருநாதராக ஊர்ப்பெரியவராக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் இருவரும் தான் படத்தின் மிக முக்கியமான தூண்கள். சில நேரம் காமெடி, பல நேரம் வஞ்சம், குரூரம் என வெரைட்டியாக விளையாடுகிறார் அருள்தாஸ்.

ஏ.டி.எம் மிஷினையே களவாடிவிட்டு தேடிவரும் அதிகாரிகளிடம்  நட்டக்கணக்கு சொல்வதாகட்டும், தன்னை போலீஸார் லாக்கப்பில் வைக்கப்போகிறார்கள் என தெரிந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்வினை வைக்கும் காட்சியாகட்டும், தன்னுடைய ஆட்கள் கடைகளில் கைவரிசை காட்டாமல் இருக்க, வணிகர் சங்கத்தில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் வாங்குவதாகட்டும், இப்படி அனைத்திலும் காமெடி நடிகர் இல்லாத குறையை போக்கி, ரசிகர்களின் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார் ஜி.எம்.குமார்.

கதாநாயகி ரக்சா ராஜ் ஏற்கனே ‘சண்டியர்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டப்பட்டவர் தான். அதனால் இந்தப்படத்திலும் அவர் குறையேதும் வைக்கவில்லை. ராம் பிரசாத் சுந்தரின் இசையில் வைரமுத்துவின் வரிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்தம் உணர்த்துகின்றன.

கதைக்கேற்ற தலைப்பாக தொப்பி என டைட்டில் வைத்ததோடு, மிகப்பெரிய ஆய்வுகளை நடத்தி மெனக்கெட்டிருக்கும் படத்தின் இயக்குனர் யுரேகா, மலைப்பகுதி கிராமத்துக்கே ரசிகனை அழைத்துச்சென்று, அங்குள்ள மக்களுடன் உலாவ விட்டிருக்கிற பீலிங்கை ஏற்படுத்துகிறார். அரசு இயந்திரத்தை அவ்வப்போது சாடுவம் வசனங்களிலும் போரடிக்காமல், அடுத்தடுத்து என விறுவிறுப்பாக காட்சிகளை பின்னியதிலும் கதையை நகர்த்தியதிலும் சுவராஸ்யம் கூட்டியிருக்கிறார் யுரேகா..

தொப்பி – ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மரியாதை

ThoppiThoppi Reviewதொப்பிதொப்பி விமர்சனம்