கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்’ படத்தின் இயக்குனர் சரிக் அண்ட்ரியாசியான் உடனான நேர்காணல்..

இயக்குநர் சரிக் அண்ட்ரியாசியான், ‘அமெரிக்கன் ஹிஸ்ட்’, ‘எர்த்குவேக்’, ‘த பிரக்னன்ட்’ மற்றும் ‘தட் வாஸ் த மென்ஸ் வேர்ல்டு’ ஆகிய படங்களுக்காக அறியப்படுபவர். இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

‘கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ்’ என்ற இந்தப் படத்தை உருவாக்குவதற்கு உங்களைத் தூண்டியது எது?

கார்டியன்ஸ்’ படம் என்பது எனது கனவு புராஜெக்ட் ஆகும். நான் எப்போதுமே சூப்பர் ஹீரோ வகைப் படங்களின் பெரிய ரசிகன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இப்படித்தான். இதை வெறும் சினிமா சார்ந்த அம்சமாக மட்டுமே பார்த்துவிட முடியாது (ஆக்ஷன் படங்களைப் போல பொதுவான அம்சங்களைக் கொண்டிராமல், சூப்பர் ஹீரோ படங்கள் சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்), மாறாக, சமூக மற்றும் ஊக்கம் சார்ந்த அம்சங்களையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும். சூப்பர் ஹீரோ படங்களைப் பார்க்கும் குழந்தைகளும், டீனேஜ் வயதினரும், அதை தீய சக்தியை வெல்வதற்கான சிறந்த போராட்ட உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் வித்தியாசமாக இருந்தால், நீங்கள் எதிலோ குறையுள்ளவராய் இருக்கிறீர் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மக்களை கவர்ந்திழுத்து, அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியதாய் ஒரு திரைப்படம் திகழ வேண்டும். சூப்பர் ஹீரோ படங்கள் அதற்கான சிறந்த உதாரணங்கள்.

பிற அமெரிக்க சூப்பர் ஹீரோ படங்களிலிருந்த இது எந்த வகையில் மாறுபட்ட படம்?

ரஷ்யாவிலிருந்து இந்த வகையிலும் வெளிவரும் முதல் படம் இது. உலகின் அந்தப் பகுதியிலிருந்து இதுபோன்ற திரைப்படம் வந்ததில்லை. கலாச்சார மற்றும் தேசிய மேம்பாட்டு ரீதியாக வழங்குவதற்கு எங்கள் சூப்பர் ஹீரோக்களிடம் நிறைய உள்ளது.

உங்களின் இந்தப் படம் வேறுபல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுடன் ஒப்பிடப்படும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா அல்லது அதுகுறித்து அஞ்சியதுண்டா?

கட்டாயமாக, பயம் இருந்ததில்லை. ஆனால், இந்தப் படம் ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடப்படும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனெனில், இது அந்த வகையைச் சேர்ந்ததுதான். அதேசமயம், இது ரஷ்யாவிலிருந்து இந்த வகையில் வெளிவரும் முதல் படம். உலகின் அந்தப் பகுதியிலிருந்து வெளிவரும் இதுபோன்ற படங்கள் எப்போதும் வெளிவந்ததில்லை.

நீங்கள் வளர்ந்து வரும்போது, உங்களை கவர்ந்திழுத்த படங்கள் மற்றும் இயக்குநர்கள் பற்றி…?

இதுவொரு நுட்பமான மற்றும் சிக்கலான கேள்வி. ஏனெனில், பல பேர் இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதுபோன்று பட்டியலிடுகையில், முக்கியமான யாரையேனும் விட்டுவிடுவோமா என்ற பயம் நம் அனைவருக்கும் இருக்கும். அந்த விடுபட்ட நபர் நினைவிற்கு வரும்போது, மிகவும் தாமதமாகியிருக்கும். நான் முதன்முதலாக ‘குட்ஃபெல்லாஸ்’ பார்த்தபோது, செல்வாக்கு செலுத்தல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அப்படத்தின் இயக்குநர் மார்டின் ஸ்கோர்சஸி நான் ஒரு இயக்குநராக வருவதற்கு என்னுள் மிகுந்த தாக்கம் செலுத்தினார். அப்படத்தை நான் பல தடவைகள் பார்த்து ரசித்தேன். அன்று இரவே, நான் என் வாழ்க்கையில் என்னவாக ஆக வேண்டுமென்று அறிந்துகொண்டேன்.

நீங்கள் ரஷ்யாவில் ஒரு புகழ்பெற்ற இயக்குநராகவும், ஹாலிவுட்டிலும் புகழ்பெற்றவராகவும் இருக்கிறீர்கள். ஒரு படம் உருவாக்க வேண்டுமென உங்களைத் தூண்டுவது எது?

எனது மிகச்சிறந்த ஊக்கம், எனது குடும்பம் தான். எனது குழந்தைகள் என்னை படம் எடுக்குமாறு தூண்டுகிறார்கள் மற்றும் பதிலுக்கு என் படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் ஊக்கமடைகிறார்கள். அவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்கவும், நல்லது கெட்டதைப் பிரித்தறியவும், கற்றுக்கொள்ளவும், சிரிக்கவும் மற்றும் அழவும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் என் ரசிகர்கள், என் விமர்சகர்கள் மற்றும் என் நம்பத்தகுந்த பார்வையாளர்கள்.

இந்திய சினிமாத் துறை மற்றும் அங்கே உருவாகும் படங்கள் பற்றி நீங்கள் எந்தளவு அறிந்துள்ளீர்கள்?

உங்கள் நாட்டினால் மதிமயங்க செய்யப்பட்டுள்ள நான், இந்தியப் படங்கள் மற்றும் இந்தியாவைப் பற்றிய படங்களின் பால் எப்போதுமே ஆர்வமாக இருப்பேன். நான் சோவியத் யூனியனில் வளர்ந்து வந்தபோது, பாலிவுட் படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. நான் ‘சீதா அண்ட் கீதா’ என்ற படத்தை பொழுதுபோக்கிற்காக அல்லாது பலமுறை பார்த்திருக்கிறேன். நான் அந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். திறமைவாய்ந்த மனிதர்கள் உலகின் எப்பகுதியிலும் வாழ்வார்கள் எனப்தை நான் அறிந்துகொண்டேன். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘லைஃப் ஆஃப் பை’ மற்றும் ‘லயன்’ ஆகிய படங்கள் என் உள்ளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றவை.

நீங்கள் அமெரிக்க நடிகர்களை வைத்து ‘அமெரிக்கன் ஹெய்ஸ்ட்’ என்ற படத்தை எடுத்துள்ளீர்கள். ரஷ்யாவிலிருந்து அமெரிக்க சினிமாத் துறையில் பணியாற்றியதை எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் சினிமாத்துறை உலகளாவிய ஒன்றாக மாறி வருகிறது. படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, படத்தை தயாரிப்பது, போஸ்ட்-ப்ரொடக்ஷன் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய அனைத்துமே அப்படித்தான். இத்துறையில் பல சிறந்த நிபுணர்களை, அமெரிக்காவும், ரஷ்யாவும் வழங்கி வருகின்றன. அமெரிக்க சினிமா சந்தை, தொடக்கம் முதலே உலகளாவிய ஒன்றாக இருக்கிறது. அதேசமயம், ரஷ்ய சந்தை மெதுவானதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் இதில் இருக்கிறது. பல ரஷ்ய திரைப்படங்கள், சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பல ரஷ்ய நிபுணர்கள் ஹாலிவுட் மற்றும் உலகளவில் பணியாற்றி வருகின்றன. ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் தொடர்பான படங்கள் உலகளாவிய முக்கியத்துவம் பெறுபவையாக உள்ளன. நாம் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான நல்ல படங்களை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கிறீர்களா?

நிச்சயமாக…

ஆஸ்கருக்கு எந்தப் படம் உங்களின் தேர்வாக இருக்கும்?

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு படமுமே அவற்றின் தனித்தன்மையில் சிறந்தவைதான். நான் மார்டின் ஸ்கார்சஸி எடுத்த ‘சைலன்ஸ்’ என்ற படத்தை எதிர்பார்த்தேன். ஆனால், ஆஸ்கார் அகடமியால் அந்தப் படம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதுவொரு மிகச்சிறந்த படம் என்பது என் கருத்து.

நீங்கள் சேர்ந்து பணியாற்ற விரும்பும் ஏதேனும் அமெரிக்க நடிகர் பற்றி…

பலர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒருவரைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவது முறையாக இருக்காது. அதேசமயம், நான் கட்டாயம் இணைந்து பணியாற்ற விரும்புவோர் என்று குறிப்பிட வேண்டுமானால், ராபர்ட் டி நிரோ மற்றும் அல் பாசினோ ஆகியோரின் பெயர்களைச் சொல்லலாம்.

இந்திய நடிகர் யாருடனாவது இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மற்றும் இந்தியாவில் படம் எடுக்கும் எண்ணமுண்டா?

நான் எப்போதுமே புதிய வாய்ப்புகளை மறுப்பதில்லை. இந்தியாவில் படம் உருவாக்குவதென்பது ஒரு அற்புத அனுபவம். உங்கள் நாடு தனித்துவமானது மற்றும் உலகிலுள்ள மக்களை தன்பால் ஈர்க்கவல்லது. நான் மிதுன் சக்ரவர்த்தியின் தீவிர ரசிகன். அவரது படங்களை நிறையப் பார்த்திருக்கிறேன். அவரின் ஆளுமை, அவரின் நடிப்பு மற்றும் எதிர்பாராத புகழ் ஆகிய அனைத்துமே என்னை எப்போதுமே தூண்டுபவையாக இருந்துள்ளன. அதேசமயம், தேவ் படேல், ஃப்ரெய்டோ பின்டோ, ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற புதிய தலைமுறை இந்திய நட்சத்திரங்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். அவர்களின் பெயர்களே கிளர்ச்சியூட்டக்கூடியவை. அவர்கள் நல்ல திறமையாளர்களும்கூட…!

அமெரிக்கன் ஹெய்ஸ்ட்கார்டியன்ஸ் - தி சூப்பர் ஹீரோஸ்சரிக் அண்ட்ரியாசியான்சைலன்ஸ்மார்டின் ஸ்கோர்சஸி