தெகிடி – விமர்சனம்


தெகிடி படம் பார்த்துவிட்டு நான், ஜெகன், செந்தில், ஆனந்த், பன்னீர் அனைவரும் வெளியில் டீக்கடைக்கு வந்தோம்..

நான் : ஜெகன்.. இந்தப்படத்தை பத்தி நாம பண்ணப்போற விமர்சனத்த குறைஞ்சது 1000 பேராவது படிப்பாங்க.. அதனால படத்தை பத்தின உங்க ஒவ்வொருத்தர் கருத்தையும் ஓப்பனா சொல்லுங்க.. அந்தக்கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்றதுன்னாலும் சொல்லலாம்.

ஜெகன் : சார்.. கதைச்சுருக்கத்தை மட்டும் நீங்களே சொல்லிருங்களேன்…

நான் : அந்த வேலைய எங்கிட்டயே தள்ளிட்டீங்களா..? சரி.. சொல்றேன்.. தஞ்சாவூர்ல இருக்குற அசோக் செல்வனுக்கு டிடெக்டிவ் வேலைக்கு போகணும்னு ஆசை.. அதுக்கேத்த மாதிரி சென்னைல டிடெக்டிவ் வேலையும் கிடைக்குது.. ஆரம்பத்துல நாலஞ்சு பேரை பத்தி, அவங்களோட ரெகுலர் ஆக்டிவிட்டீஸ் பத்தி துப்பறிய சொல்லி அசைன்மெண்ட் கொடுக்குறாங்க.. அசோக்கும் நாலுபேரோட டீடெய்ல சரியா கொடுத்துர்றாரு.. ஆனா அஞ்சாவது ஆள் தான்..

ஆனந்த் : இருங்க நான் சொல்றேன்.. அஞ்சாவது ஆள் ஜனனி(ஐயர்).. இவரோட அசைன்மெண்ட் வர்றதுக்கு முதல்நாள் தான் ஜன்னியை அசோக் பாக்கிறாரு.. அவர் மேல ஒரு ஈர்ப்பு.. அதுனால அவரோட ஃபைலை மட்டும் அப்படியே தாமதப்படுத்துறாரு.. ஒரு நாள் ஏதேச்சையா பேப்பர் செய்தி மூலமா, தான் ஏற்கனவே துப்பறிஞ்ச ஆளுகள்ல ரெண்டு பேரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்கன்னு தெரியவருது..

பன்னீர் : அண்ணே மீதிய நான் சொல்லட்டுமா..?

செந்தில் : சொல்லு.. ஆனா சுருக்கமா சொல்லு.. க்ளைமாக்ஸ சொல்லிராத..

பன்னீர் : எனக்கு தெரியாதாண்ணே..? இப்ப அசோக்குக்கு டவுட் வருது.. மீதி ரெண்டு பேரை அலர்ட் பண்ண முயற்சிக்கிறாரு.. ஆனா பேட்லக்.. அவங்களும் ஆக்சிடெண்ட்ல காலி.. இப்ப லிஸ்ட்ல அடுத்தது யாரு..? ஜனனிதான்..

ஜெகன் : இரு.. அசோக் ஜனனிய காப்பாத்தினாரா, இந்த ஆக்சிடென்ட்லாம் எதுக்காக நடக்குதுன்னு கண்டுபிடிச்சாரா.. இதத்தான சொல்லப்போற..?

நான் : அதான் சொல்லிட்டீங்களே ஜெகன்.. சரி.. செந்தில்.. இப்ப முதல்ல நீங்க சொல்லுங்க படத்தை பத்தி..

செந்தில் : இதுல நான் அசோக் செல்வனை பத்தி முதல்ல சொல்லிர்றேன்.. அவரு ‘வில்லா’வுல பாத்தத விட இந்தப்படத்துலதான், கேரக்டருக்கு பர்ஃபெக்ட்டா ஃபிட் ஆகியிருக்காரு.. சொல்லப்போனா கதை போற ஸ்பீடுக்கு அவரும் நல்லாவே ஓடிருக்காரு.. தான் விரும்பி வந்த வேலை தன்னைய இவ்வளவு சிக்கல்ல மாட்டிவிட்ருச்சேங்கிற வருத்தத்தை படம் முழுதும் மெயிண்டன் பண்ணிருக்காரு.

பன்னீர் : ஜனனி ‘பாகன்’ல இருந்தத காட்டிலும் இந்தப்படத்துல இன்னும் அழகா இருக்காங்கள்ல சார்..

செந்தில் : ஹீரோயின்னதும் எப்படி எண்ட்ரி ஆகுறான் பாரு..

ஜெகன் : இருந்தாலும் அவன் சரியாத்தாண்ணே சொல்றான்.. ஜனனியோடது ரொம்பவும் அலட்டிக்காத கேரக்டர். அதோட நம்மள படம் பார்க்குறப்ப எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணவே இல்லையே..

நான் : ஆனா நான் ரொம்பவே ரசிச்சது, ஜெயபிரகாஷ் கேரக்டர்தான்.. நேத்து பாத்த வல்லினம்’ படத்துல தொழிலதிபரா கலக்கியிருந்தாருன்னா, இதுல போலீஸ் அதிகாரியா அசத்துறாரு.. அதுலயும் அசோக்கை வில்லன்கிட்ட இருந்து காப்பத்துற சீன் ரொம்ப நல்ல இருக்கு..

செந்தில் : அசோக்கோட ஃப்ரண்ட் ‘நம்பி’யா வர்ற காளிகிட்டயும் நல்ல எதார்த்தமான நடிப்புதான்ப்பா.. ஆனா ஒருபக்கம் பார்த்தா தனுஷ்கூட, ச்சிகுமார் கூட நண்பர் கேரக்டர்ல வருவாரே முருகதாஸ் அவர் மாதிரியே இருக்கு.

பன்னீர் : அதே மாதிரி.. ஜனனியோட ஃப்ரண்ட்டா வர்ற அந்த ரெண்டு பொண்ணுகளும் நல்லா நடிச்சிருக்காங்கண்ணே..

ஆனந்த் : சார்.. வில்லன் சைலேஷா வர்ற ஜெயகுமார் டிடெக்டிவ் பத்தின ஒரு பயத்தை நம்ம மனசுல ஏற்படுத்திர்றாரு..

பன்னீர் : அண்ணே.. அதுவும் அவரோட காருக்குள்ள அசோக் தேடிக்கிட்டு இருக்கு சமயம் பார்த்து, அவர் வர்றப்ப திக் திக்குன்னு இருந்துச்சுண்ணே.

செந்தில் : இதுல என்ன புதுசுன்னா.. பணத்துக்காக இப்படிக்கூட நடக்குதான்னு ஒரு கோணத்துல யோசிச்சுருக்காங்களே..

ஜெகன் : நடக்குதுண்ணே.. சமீபத்துல கூட கோயமுத்தூர்ல வக்கீல் ஒருத்தர் தன் மனைவி இறந்துட்டதா நாடகம் ஆடி நிறைய பணத்தை சுருட்டி, அதுக்கப்புறமா பிடிப்பட்டாருல்ல.. பேப்பர்ல கூட வந்துச்சே.. அதே மாதிரி இதுவும் ஒரு வகையான மோசடிதாண்ணே..

நான் : ரெண்டு பேரு கொலையாகும்போதே எனக்கும் அந்த டவுட் வந்துச்சு.. அது நாலு பேரா மாறுனதும் உள்ள ஏதோ மேட்டர் இருக்குன்னு புரிஞ்சுருச்சு.. ஆனா இதுவாத்தான் இருக்கும்னு யூகிக்க முடியலை..

ஆனந்த் : அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் ஓகே.. ஆனா இதுக்கெல்லாம் காரணகர்த்தாவா இருக்குறவர், தன் கோணத்துல சொல்ற காரணம் தான் கொஞ்சம்கூட ஒட்டவே இல்ல..

செந்தில் : இதுல இன்னொரு முக்கிய ஆளை கண்டுபிடிக்காம விட்டுட்டாங்க.. முயற்சி பண்ணினா அடுத்த ரெண்டு சீன்ல சிக்கிருவாரு. ஆனா அவர வச்சே, அடுத்து தொடரும்னு போட்டு ரெண்டாம் பாகத்துக்கு இப்பவே அடி போட்டுட்டாங்க..

ஜெகன் : ஏன் சார்.. இந்த படத்தோட டைரக்டர் ரமேஷ் குறும்பட டைரக்டராமே..?

நான் : ஆமா ஜெகன்.. கலைஞர் டி.வில ‘பருதி மாறன்’ன்னு ஒரு குறும்படத்துக்காக ‘நாளைய இயக்குனர்’ல முதல் பரிசு வாங்குனவரு தான் இவரு..

ஆனந்த் : பரவாயில்ல.. ரெண்டுமணி நேர படத்தையும் கொஞ்சம் கூட போரடிக்காம பண்ணியிருக்காரே..

பன்னீர் : பாட்டு கூட படத்தை அவ்வளவா தொந்தரவு பண்ணலை பாத்தீங்கள்ல..?

செந்தில் : மியூசிக் யாரு.. நிவாஸ் கே.பிரசன்னாவா..? புதுசு தான்.. அதுல படத்தோட ஓப்பனிங் சாங் நல்ல இருந்துச்சுப்பா..

ஜெகன் : அதே மாதிரி ஒளிப்பதிவும் நல்லா இருந்துச்சு.. குறிப்பா நைட் எஃபெக்ட் சீன்லாம் ஓகேப்பா

நான் : அது சரி.. இதுல எங்கேயாவது லாஜிக் இடிக்குதா.?

செந்தில் : ஒண்ணு ரெண்டு இடிக்கத்தான் செய்யுது.. ஆனா கதையோட்டத்துல அதெல்லாம் ஒண்ணும் பெருசா தெரியலை…

ஜெகன் : அதானே.. ரெண்டு மணி நேரம் போரடிக்காம போச்சா அப்படின்னுதான் பாக்கணும். அந்த வகையில ‘தெகிடி’ என்னை ஏமாத்தலை..

நான் : எனக்கும் அதே ஃபீல் தான்.. ஓ.கே. அடுத்த படத்துல எல்லோரு மீட் பண்ணலாம்.. பை.பை..
குமபல் கலைந்தது..

Abi & AbiAbinesh ElangovanAshok SelvanC V KumarC. Senthil KumarJanani IyerJeya PrakashP.RameshTCS StudiosThirukumaran Entertainment
Comments (1)
Add Comment
  • auto verkopen

    271759 155133Having read this I thought it was really informative. I appreciate you taking the time and effort to put this post together. I once again locate myself spending way to much time both reading and commenting. But so what, it was nonetheless worth it! 574616