கன்னட ரீமேக்கில் நடிக்கும் சித்தார்த் – தயாரிக்கிறார் சி.வி.குமார்

நல்ல கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருபவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் ஃபிலிம்ஸ் சி.வி.குமார். பெரும்பாலும் குறும்பட உலகிலிருந்து வெளிவரத் துடிக்கும் திறமைசாலிகளை வெள்ளித்திரைக்கு கைதூக்கி விடுவதில் முதன்மையான நபராக இருக்கிறார் குமார். அதற்காக நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வேறு மொழியில் இருந்தால் அதை ரீமேக் செய்யும் வாய்ப்பையும் அவர் தவற விடுவதாக இல்லை.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய ‘லூசியா’ என்ற படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்தின் ஹீரோவாக நடிக்கிறார் சித்தார்த். இந்தப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனரான பிரசாத் ராமர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சைக்காலஜிக்கல் த்ரில்லரான ‘லூசியா’வை பவன்குமார் என்பவர் இயக்கியிருந்தார் கடந்த ஜூலை மாதம் லண்டனில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது மிகச்சிறந்த படம் என பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது ‘லூசியா’.

பல இந்திப்படங்களை பின்னுக்குத்தள்ளி இந்தச்சாதனையை செய்த ‘லூசியா’வை ‘எனக்கு நானே கொடுக்கும் பிறந்தநாள் பரிசு’ என்று சிலாகித்துப் பாராட்டினார் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்.

அதேபோல படத்தைப் பார்த்த சித்தார்த் அப்போதே இயக்குனர் பவன் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் சித்தார்த்தை இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் தூண்டியுள்ளது. வரும் ஜனவரி மாதம் படப்பைடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்கள்.

Siddharthசித்தார்த்
Comments (0)
Add Comment