அறுபதுகளில் தமிழ்சினிமாவில் கோலோச்சிய பழம்பெரும் இயக்குனரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நேற்று காலமானார். இயக்குநர் 1962ல் ஏ.எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான “சாரதா’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இரண்டாவதாக இயக்கிய “கற்பகம்’ படத்தில் தான் கே.ஆர். விஜயாவை அறிமுகம் செய்தார். இப்படத்தில் அவருக்கு பெரும் லாபம் கிடைக்கவே, அவர் கட்டிய ஸ்டுடியோவுக்கு “கற்பகம்’ என்று பெயர் வைத்தார்.
நடுத்தரக் குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அவற்றை சுவைபட கோர்த்து ஒரு கதையாக்கி திரைப்படமாகத் எடுப்பதில் சிறந்த இயக்குனர் என பெயர் பெற்றார் கே.எஸ்.ஜி. ‘கை கொடுத்த தெய்வம்’, ‘சித்தி’, ‘செல்வம்’, ‘பணமா பாசமா?’, ‘உயிரா மானமா?’, ‘குலவிளக்கு’ போன்ற பல சமூகப் படங்களை இயக்கிய கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ‘ஆதி பராசக்தி’ என்ற பக்திப்படத்தையும் டைரக்ட் செய்தார்.
இவர் கடைசியாக இயக்கிய படம் 1992ல் விஜயகாந்த் நடித்த காவியத்தலைவன். தமிழ்சினிமாவின் மதிப்புமிக்க இயக்குனர்களின் வரிசையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு நமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்வோம்.