திரையுலகில் சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் மிகச்சிறந்த அவுட்டோர் யூனிட்டுகளில் ஒன்றான ரவிபிரசாத் கடந்த வருடம் பட தயாரிப்பில் கால் பதித்தது ஞாபகம் இருக்கலாம். தற்போது இன்னொரு புதிய முயற்சியாக வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தங்கள் எதிர்காலம் தேடிவரும் இளைய தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய அகாடமி ஒன்றை இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க இருக்கின்றனர்.
‘ப்ளு ஓசன் பிலிம் & டெலிவிஷன் அகாடமி’ (Blue Ocean Film & Television Acadamy) என்பதுதான் இதன் பெயர்.. சுருக்கமாக சொன்னால் ‘போப்டா’ (BOFTA). இந்த அகாடமியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை எழுதுதல், சினிமா தயாரிப்பு, தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் சினிமா ஜர்னலிசம் தொடர்பான அனைத்தையும் கற்றுக்கொள்ள தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன.
அனுபவம் வாய்ந்த கலை வித்தகர்களான இயக்குனர்கள் மகேந்திரன், கே.பாக்யராஜ், பார்த்திபன், நாசர், ஆகியோருடன் விஷ்ணுவர்த்தன், வெங்கட்பிரபு, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட இளையதலைமுறை பிரபலங்களும் தங்கள் திரையுலக அனுபவங்களை இதில் மாணவர்களுக்கு பாடமாக நடத்த உள்ளார்கள்.
அதுமட்டுமல்ல படத்தயாரிப்பு பற்றிய பிரிவில், தயாரிப்பு துறையில் திறமையும் பல வருட அனுபவமும் வாய்ந்தவரும், யுடிவியின் தயாரிப்பு நிர்வாகியுமான தனஞ்செயன் சினிமா தயாரிப்பின் நுணுக்கங்களை கற்றுத்தர இருப்பது சிறப்பு அம்சமாகும்.. தனஞ்செயன் ஏற்கனவே திரையுலகம் குறித்த புத்தகங்களையும், தயாரிப்பு நுணுக்கங்கள் குறித்த கட்டுரைகளையும் எழுதி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமா தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவும் இதில் தனது பங்களிப்பை தர இருக்கிறார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராம் தியேட்டர் அருகில் அமைந்துள்ள இந்த அகாடமியின் துவக்க விழா வரும் மார்ச்-4ஆம் தேதி உலகநாயகன் கமல் தலைமையில் மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த அகாடமியின் ஸ்டூடண்ட்ஸ் கைடை ராதிகா சரத்குமார் வெளியிட முதல் கைடை நடிகை அமலாபால் பெற்றுக்கொள்கிறார். போப்டாவின் வெப்சைட்டை நடிகர் ஆர்யா துவக்கி வைக்கிறார்.