திருமணம் என்னும் பந்தத்திற்குள் கணவன் – மனைவியாக வாழும் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும். அதில் யாரோ ஒருத்தரின் மனதில் சந்தேகம் என்கிற பேய் பிடித்து ஆட்டினால் அது எப்படி மொத்த குடும்பத்தின் நிம்மதியையே குலைத்துவிடும் என்கிற கருத்தை கிராமத்துப் பின்னணியில் சொல்லியிக்கும் படம் தான் இந்த ‘தப்பாட்டம்.’
தனது தாய்மாமன் கங்காணியுடன் தப்பாட்டம் அடித்து பிழைப்பு நடத்தி வருகிறார் நாயகன் துரை சுதாகர். எப்போதும் தனது மாமா தனது அக்கா, அக்கா மகளும், நாயகியுமான டோனா ஆகியோர் மீது அதீத பாசத்தோடு இருக்கிறார். அக்க மகளோ மாமனே உயிர் என சிறுவயது முதலே வாழ்ந்து வருகிறார். .
அதே ஊரில் வசிக்கும் காமுகனான பண்ணையார் மகன் நாயகி டோனாவிடம் வாலாட்ட, அவனை அறிந்துவிட்டு தப்பிக்கிறார் நாயகி. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லாவேண்டாம் என கூறிய, டோனாவின் தயார் அவசரம் அவசரமாக தன் மகளை துரை சுதாகருக்கு திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கிறாள் டோனா. இந்த நிலையில் ஒருநாள் துரை சுதாகர் திருமணம் செய்வதற்கு முன்பாகவே அவரது அக்கா மகள் டோனாவை நான் கெடுத்துவிட்டேன் என பண்ணையார் மகன் வெத்து கெத்து காட்டுவதற்காக மற்றவர்களிடம் சொன்னதை உண்மை என நம்பும் துரை சுதாகர் டோனாவைப் பிரிகிறார்.
இந்த சந்தேகப்பேய் அவரை நன்றாக ஆட்டிவைக்க, மனைவி, அம்மா, அக்கா, மாமா ஆகியோரின் பேச்சு எதுவும் அவர் காதில் ஏறவில்லை. இப்படியிருக்க பிரிந்த ஜோடி மீண்டும் இணைந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
சினிமாவுக்குள் வரும் போதே பட்டத்தோடு வருவது தான் லேட்டஸ்ட் ஃபேஷன். அந்த வகையில் இப்படத்தின் நாயகர் துரை சுதாகரும் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தோடு படத்தில் எண்ட்ரி கொடுக்கிறார். பட்டத்தை டைட்டிலில் காண்பிக்கும் போது பின்னணியில் ஒரு குத்தாட்ட சவுண்ட், ஓப்பனிங் சாங் என மாஸ் ஹீரோ லெவலுக்கு துரை சுதாகரை தூக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமான்.
முதல் படம் தான் என்றாலும் தனக்குக் கொடுத்த தப்பாட்டக் கேரக்டருக்கு எந்தளவுக்கு ஒன்றி நடிக்க முடியுமோ? அந்தளவுக்கு அந்தத் தொழிலில் இருப்பவர்களைப் போல காட்சிகளில் எளிமை காட்டியிருக்கிறார். இருந்தாலும் சினிமாவுக்குள் வரும்போதே பட்டத்தோடு வருவது, ஓப்பனிங் சாங் என மாஸ் ஹீரோ லெவலுக்கு என்ட்ரி கொடுப்பதை என்னவென்று சொல்வது..?
விளையாட்டுப் பெண்ணாக இருக்கும் நாயகி டோனா ரோசாரியா, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுப்பு வந்தது போல் நடித்திருப்பது பாராட்டும் படியாக இருந்தது. அதேசமயம் இடை வேளைக்குப்பின் ஒவ்வொரு காட்சியிலும் கதறி அழுகிற போது அவரும் சிரமப்பட்டு நம்மையும் சங்கடப்பட வைக்கிறார்.
துரை சுதாகரின் மாமந கங்காணியாக வரும் இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமானிடம் மிக நேர்த்தியான, பக்குவப்பட்ட நடிப்பு. நாயகனின் அக்கா வெள்ளந்தியான கிராமத்துப்பெண்ணாக கவனம் ஈர்க்கிறார்.. நாயகனின் அம்மாவுக்கு மேக்கப்பில் காட்டிய சிரத்தையை, ஒரு வயதான பெண்ணையே அந்த கேரக்டரில் நடிக்க வைப்பதில் காட்டியிருக்கலாம்.
டெக்னாலாஜி எங்கேயோ போய்க்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இன்னும் கிராமத்து மைனர், சாராயக் கடை, மரத்தடி பஞ்சாயத்து என காலங்காலமாய் கிராமத்துக் கதைகளில் பார்த்த சங்கதிகளே படம் முழுக்க நீள்வது, கதையில் புதுமையில்லாதது, காமெடி என்ற பெயரில் வருகிற காட்சிகள் ரசிகர்களுக்கு டப் கொடுக்கும்.
திருமணம் என்கிற பந்தத்தில் சந்தேகம் கூடாது அப்படி இருந்தால் இல்லற வாழ்க்கை நரகமாகி விடும் என்கிற கருத்தை சொன்னதற்காக ‘தப்பாட்டம்’ ஆடாத இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமானை பாராட்டலாம்.