“பொங்கலை புறக்கணியுங்கள்” ; தங்கர் பச்சான் வேண்டுகோள்..!

“நீ என்னவாகப் போகிறாய் என மாணவர்களைப் பார்த்து கேட்கும் ஆசிரியர்களிடம் எந்த ஒரு மாணவனும் நான் விவசாயம் செய்யப் போகிறேன் என சொல்வதில்லை. எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.இந்த அளவில்தான் நாம் விவசாயிக்கு மரியாதை கொடுத்து வைத்திருக்கிறோம்” இப்படிப்பட்ட உள்ளக்குமுறலுடன் கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.

பொங்கல் பண்டிகை என்பதே உழவர்களை வணங்கும் நாளாகத்தான் கொண்டாடுகிறோம்.. ஆனால் இங்கே விவாசயிகள் தினம் தினம் செய்தது மடிகின்ற அவலநிலையில் பொங்கலை கொண்டாட வேண்டாமே என்கிற ரீதியில் அவர் கூறியுள்ள கருத்தை பார்ப்போம்..

“பொங்கலை கொண்டாடுவதற்காக தயாராக காத்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு விருந்தளிக்க வரும் திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்யக் காத்து கிடக்கிறோம். எப்பொழுதும்போல் அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துச் செய்திகளைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்திற்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான்.

அதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றித் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் அடுக்கடுக்காக செத்து மடியும் உழவர்கள் பற்றிய செய்திகளை நாமும் கண்டு கொள்ளாமல் கடந்துப் போகிறோம்.

இவ்வளவு காலம் எப்படியோ இருந்து விட்டோம் இப்போதாவது அவனது அழுகுரல் இந்த உலகத்துக்கு கேட்கட்டும். செத்து மடிந்த விவசாயிகளுக்காகவும், சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் இந்த ஆண்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கலாம்…. ஆனால் இது நடக்கின்ற காரியமா?” என கேட்டுள்ளார் தங்கர் பச்சான்.

PongalThangar Batchanதங்கர் பச்சான்