தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை சினிமாவின் ஆதிக்கம் என்பது எல்லோரும் அறிந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு பாட்சா காலத்தில் இருந்தே இருக்கும் ஒன்றுதான் என்றாலும், அது தற்போது சூடுபிடித்துள்ளது. இதே காலக்கட்டத்தில், ரஜினிக்கு போட்டியாக கமல்ஹாசனும் அரசியல் களத்தில் நுழைய வாய்ப்புகள் உள்ளதோ என எண்ணத்தக்க வகையில் சில சம்பவங்களும் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, கடந்த சில வருடங்களாகவே விஜய்யும் தனது அரசியல் ஆசையை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது “மெர்சல்” படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் கூட விஜயின் அரசியல் பிரவேசம் வர இருக்கிறதோ என்கிற பிம்பத்தை தோற்றுவித்தது.
இந்த ரீதியில் தான் நடிகர் விஷாலின் கடந்த இரண்டு வருட திரையுலக அதிரடி செயல்பாடுகளை பார்க்கும்போது அவருடைய பங்கும் அரசியலில் பின்னாளில் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதற்கு கட்டியம் கூறும் விதமாக. ரசிகர் மன்றங்களை வெகுவாக ஊக்குவித்து வரும் விஷால், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இவைகளையெல்லாம் தொகுத்து “தலைவன் வருகிறான்!” என்ற பாடலும் இன்று விஷாலின் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுத, இஷான் தேவ இசையமைப்பில் க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ளார்.