மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும் நீட் தொடர்பான பிரச்சினையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கல்வி பிரச்சனை தொடர்பாக திரையுலகம் ஒன்று கூடி இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஆனால் ஏற்கனவே மாணவர்களின் கல்வி விஷயங்களில் தனது பங்களிப்பை பல வருடங்களாக செய்து வரும் சூர்யா, அடுத்தகட்டமாக சற்று ஆக்கப்பூர்வமாக தனது பணிகளை தொடங்கிவிட்டார்.
ஒவ்வொரு வருடமும் அகரம் மற்றும் ஸ்ரீ சிவக்குமார் அறக்கட்டளை இணைந்து மாவட்டம் தோறும் முதலிடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்குச் சான்றிதழ் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கிவருவது நாம் அறிந்த ஒன்று. ஒரு வேளை நீட் அமல்படுத்தப்பட்டு விட்டால் என்ன செய்வது..? மாணவர்கள் விண்ணப்பிக்காமல் இருந்துவிடக்கூடாதே என்று யோசித்த சூர்யா, கடந்த ஜனவரியில் நீட் குழப்பமும் தீர்வும் என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டதுடன், இந்த வருடம் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த வருடம் நீட் எழுதி மருத்துவம் கிடைக்காமல் போன மாணவர்களை விட, தகுதி இருந்தும் அரசாங்காம் கொடுத்த (அவ)நம்பிக்கை காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்து விட்டவர்கள் ஏராளம். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனி நபர் முயற்சியாக தனது அகரம் அறக்கட்டளை மூலம் தமிழகத்திலிருந்து 300 ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு மாதம் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கியிருக்கிறார் சூர்யா.
அந்த 300 பேர் படித்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதும், பெரும் சிரமங்களுக்கிடையில் அந்த மாணவர்கள் தங்கள் பள்ளி இறுதி வகுப்பினை முடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் தமிழக மாணவர்களின் உரிமையான நீட்டிலிருந்து விலக்கு என்பதில் உறுதியாக இருந்தாலும், நீட், இந்திய அளவில் சட்டமாக அமல் படுத்தப்படும் போது, மாநில அரசு உறுதியான சட்டம் இயற்றி அதனை மத்திய அரசும் அங்கீகரித்து நீட் குழப்பங்களுக்கான நிரந்தரத் தீர்வு ஏற்படாதவரை, நமது மாணவர்கள் உயர்கல்வியினைத் தொடர முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற உயர்ந்த எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் சூர்யா.