சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ இன்னும் என்னென்ன சாதனைகளைத்தான் படைக்கப்போகிறதோ தெரியவில்லை. அந்தவகையில் லேட்டஸ்ட் என்னவென்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக யாரும் செய்திராத ஒரு புதுமையை ஜூலை-15ல் ‘கபாலி’ ரிலீஸுக்காக செய்ய இருக்கிறது ஏர் ஆசியா விமான போக்குவரத்து நிறுவனம்.
கர்நாடகாவை பொறுத்தவரை நமது தமிழ்ப்படங்கள் இங்கே ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கழித்துதான் அங்கே திரையிடப்படவேண்டும் என்பது தொடர்ந்து ஸ்ட்ரிக்ட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஜூலை-15ல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கபாலி படத்தை பார்த்துவிட்டு திரும்பிச்செல்வதற்காகவே ரசிகர்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது ஏர் ஆசியா நிறுவனம்.. இந்த நிறுவனம் ‘கபாலி’ படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர பங்குதாரர்களில் ஒன்று ஒரு டிக்கெட்டின் விலை 7860 ரூபாய் மட்டுமே..
ஜூலை 15ஆம் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூரில் கிளம்பும் இந்த சிறப்பு விமானம் காலை 7.10 மணிக்கு சென்னையை வந்தடையும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்கு பெங்களூரை சென்றடையும். சென்னையில் இறங்கியது முதல் காலை, மதிய உணவு, ஏர்போர்ட்டில் இருந்து தியேட்டருக்கு வந்து, திரும்பிச்செல்லும் வாகன வசதி, முதல் காட்சிக்கான தியேட்டர் டிக்கெட், தியேட்டரில் ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் என எல்லாமே இந்த தொகைக்குள் அடங்கி விடுகிறதாம்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து ‘கபாலி’ பட ஒப்பனிங் ஷோ பார்ப்பவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அது இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.