இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இங்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திடாதா என ஏங்கும் இலங்கை தமிழர்களையும் கட்டுமானத் தொழிளார்களாக பணிபுரிபவர்களின் அவலங்களையும் இணைத்து உருவாகியுள்ள படம் தான் சிவப்பு. கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்க, ‘பிரம்மன்’ நவீன் சந்திரா கதாநாயகனாகவும் ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் தணிக்கை குழுவினரின் பார்வைக்கு சென்று வந்த இந்தப்படம் ஒரு கட் கூட இல்லாமல் சான்றிதழை பெற்றுள்ளது.
அதற்கு காரணம், இலங்கை அகதிகள் படும் அவலம் பற்றிய கதை என்றாலும், தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும் ஏரியா பக்கம் கதையை நகர்த்தாமல், எடுத்துக்கொண்ட நேர்கோட்டிலேயே படத்தை இயக்கியுள்ளார். அதனாலேயே சென்சாரினால் எந்த தர்மசங்கடமும் ஏற்படவில்லை.
இலங்கையில் இருந்து அகதியாக வரும் பெண்ணுக்கும் அவரை காதலிக்கும் தமிழக வாலிபனுக்கும் இடையே ஏற்படும் காதலை வைத்து இலங்கை அகதிகளின் இன்றைய அவல நிலையை படம்பிடித்துள்ள சத்ய சிவா, இந்தப்படம் தமிழ் மக்களின் மனசாட்சியை உலுக்கும் படமாக இருக்கும் என்கிறார்.