கலையுலக மார்கண்டேயன் சிவகுமாரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாரிசுகளான சூர்யா, கார்த்தி இருவருமே அவருக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு ஒன்றை முன்கூட்டியே தந்துள்ளார்கள்.. நடிகர் என்பதையும் தாண்டி தன்னை எப்போதும் ஒரு ஓவியனாகவே பறைசாற்றிக்கொள்ள விரும்பும் சிவகுமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக வைத்து, அவரை மட்டுமல்ல, அவரது ஓவியங்களை ரசிக்க விரும்பும் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள் இருவரும்.
சிவகுமார் வரைந்த ஓவியங்களிலிருந்து 100 ஓவியங்களை தேர்வு செய்து அதனை கண்காட்சியாக வைத்துள்ளனர். சென்னை லலித் அகாடமியில் வைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை முன்ளாள் ஓவியக் கல்லூரி முதல்வர் அல்போன்சா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள் வீர சந்தானம், மணியன் செல்வம், தியாகு, ஏ.பி.ஸ்ரீதர், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஓவியங்களில் என்ன சிறப்பு என்றால் இவை அனைத்தும் சிவகுமார் தனது 16 வயது முதல் 24 வயது வரை வரைந்த ஓவியங்கள். “இந்த ஓவியங்களை பார்க்கும்போது என் பால்ய காலத்துக்கு சென்று விடுகிறேன். இவற்றை இங்கே அழகாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களை புத்தகமாகவும் வெளியிட இருக்கிறார்கள். எனக்கு பிறகும் இந்த ஓவியங்கள் வாழும்” என நெகிழ்கிறார் சிவகுமார்.