கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார், தான் பேஸ்புக் பக்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் தொடர்ந்து வரலாற்று நிகழ்வுகளை பற்றி எழுதிவந்த அவர், தீரன் சின்னமலை பற்றி எழுதியபோது அதில் அவர் குறிப்பிட்ட தகவல்களுக்கு எதிராக பேஸ்புக்கில் குரல்கள் எழும்பின.
கிட்டத்தட்ட அவை ஒரு குறிப்பிட்ட ஜாதி ரீதியான ஆட்களின் கண்டனங்கள் தான் என்பதால், தேவையில்லாமல் ஜாதி, மத சச்சரவுகளுக்கு ஏன் இடம் கொடுக்கவேண்டும் என நினைத்து, தான் பேஸ்புக்கிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக வருத்ததுடன் குறிப்பிட்டார்.
ஆனால் சிவகுமாரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தவர்கள் அவரது முடிவை ஏற்க தயாராக இல்லை. அதனால் தொடர்ந்து பலரும் சிவகுமாரை பேஸ்புக்கில் எழுதுவதை நிறுத்தக்கூடாது என வேண்டுகோள் வைத்தவண்ணம் இருந்தனர்.
ரசிகர்களின் வேண்டுகோளை பார்த்து மனம் மாறிய சிவகுமார், தான் எழுதிய ஒரு விஷயம் தவறாகிவிட்டது என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.