சிவகுமாருக்கு இயக்குனர் மாரிமுத்து சூட்டிய புகழாரம்..!


கலையுலக மார்கண்டேயன் சிவகுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வரைந்த சுமார் நூறு ஓவியங்கள் சென்னை லலித் அகாடமியில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பல வி.ஐ.பிகளும் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள்.. இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு ஓவியங்களை பார்வையிட்டு மகிழ்ந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, சிவகுமாரையும் சந்தித்து தனது மகிழ்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்துள்ளார். அதன்பின் சிவகுமார் பற்றிய தனது எண்ணத்தை புகழ்மாலையாக வெளிப்படுத்தியும் இருக்கிறார்.. அதில்..

“நடிகர் சிவகுமார் அவர்களுக்கு 75 வயதாம்… ‘கலையுலக மார்க்கண்டேயன்’ என்ற சொல்லின் உண்மையை இன்றுதான் உணர்ந்தேன்… 45 வயதின் தோற்றத்துடன் 75 வயதைத் தொடுகிறார் என்றால் காரணம் இல்லாமல் இல்லை… உணவுக்கட்டுப்பாடு, யோகாசனம், தியானம், புகை-மதுவை தீண்டாமை, தனிமனித ஒழுக்கம்… அத்தனையின் மொத்த உருவம் திரு.சிவகுமார் அவர்கள்…

அவரின் 75 வயதின் விழா ஏற்பாடாக அவர் வரைந்த அற்புதமான ஓவியங்களின் கண்காட்சி லலித்கலா அகடமியில் நடந்து வருகிறது… இன்று நான் போயிருந்தேன்… இன்முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றதில் மகிழ்ந்தேன்… என் மீது எப்போதும் பிரியத்தோடு இருப்பார்… நிரம்பி வழிந்தது கூட்டம்… அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்…

எல்லோரும் அவரவர்க்குப் பிடித்த ஓவியத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்… நான் புகைப்படம் எடுக்க விரும்பி நின்ற இடம் அவர் வரைந்த அவர் அம்மாவின் ஓவியத்திற்கு அருகில்… ஒரு முழு மனிதனைப் பெற்றெடுத்து உருவாக்கிய தெய்வம் அல்லவா? நெகிழ்வோடும் மகிழ்வோடும் வீட்டுக்கு வந்தேன்…

இவ்வாறு சிவகுமார் பற்றி நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் மாரிமுத்து.

MarimuthuSivakumarSivakumar Artசிவக்குமார்மாரிமுத்து