தற்போது சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்திலும், அரவிந்த்சாமி ‘சதுரங்க வேட்டை-2’ படத்திலும் நடித்து வருகிறார்கள்.. ஆச்சர்யமாக இந்த இரண்டு படத்தின் கதைக்களமும் ஒரே செயலை இரண்டுவிதமாக சிந்திப்பது, செய்வது என்கிற பாணியில் அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
சதுரங்க வேட்டை-2 படத்தை பொறுத்தவரை “இந்த சிஸ்டத்தைப் புரிஞ்சுக்க. அதை மாற்ற முயற்சி பண்ணாதே. அதைப் பயன்படுத்திட்டுப் போயிட்டே இரு’ இதுதான் ஹீரோ காந்திபாபுவின் (அரவிந்த்சாமி) பாலிசி. இப்படி இந்த சிஸ்டத்தையும் தன் மூளையையும் பயன்படுத்தி எல்லாத்தையும் பணமாக்கும் காந்திபாபு, கடைசியில் சிக்கினானா இல்லையா என்பதே கதை.
அதேசமயம் வேலைக்காரன் படத்திலோ, “‘சூழ்நிலைக்கேற்றமாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று’ இதுதான் படத்தின் டேக்லைன். அப்படி அறிவு, ஆதி (சிவகார்த்திகேயன், பஹத் பாசில்) என்று இரு இளைஞர்கள் சூழலைத் தங்களுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதில் ஒருவன் நல்லதாகவும் இன்னொருவன் கெட்டதாகவும் மாற்ற நினைக்கிறான். இப்படி மாற்றும் முயற்சியில் யார் வெல்கிறார்” என்பதே படத்தின் கதையாம்.