பிரபல கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று காலமானார். திரைத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர். 1977-ல் சிவகுமார் நடித்த கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாடல் மிகவும் புகழ்பெற்றது. 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார்.
11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராகவும் நடித்தார். 2009-ல் வெளியான ‘பசங்க’ படத்திலும் “அன்பாலே அழைக்கும் வீடு” என்கிற பாடலைப் பாடியுள்ளார்.