கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று சொல்லிவந்த நிலையில், மீண்டும் சிந்துபாத் கதை போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நேற்றுமுன் தினம் திருப்பூர் சுப்பிரமணி தரப்பு லிங்காவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பணம் கொடுத்தாகிவிட்டது என்றும் மீதிப்பணம் இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடும் என்றும் விளக்கம் அளித்தது.
ஆனால் அந்த தொகை எங்களை வந்து சேரவே இல்லை என மறுப்பு தெரிவித்துள்ள விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரப்பினர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி அதில் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். பாதிப்பு பெரிதாக இல்லாதவர்களுக்கு மட்டுமே அந்த தொகை சென்றதாகவும், பாதிக்கப்பட்டோர் இன்னும் நிவாரணம் கிடைக்காமல் இருப்பதாகவும் சிங்காரவேலன் கூறினார்.
மேலும் “திருப்பூர் சுப்பிரமணி இந்தப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க, தாங்கள் தரும் குறைந்த அளவிலான நஷ்ட ஈட்டிற்கு ஒத்துக்கொள்ளும்படியாகவும், பின்னர் ரஜினியின் கால்ஷீட்டை வாங்கி தருவதாகவும் சொல்லிவிட்டு, இப்போது நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என்கிறார்” என்றும் குற்றம் சாட்டினார் சிங்காரவேலன்.
“அதுமட்டுமல்ல, லிங்கா பிரச்சனை தொடர்பாக பேசும்போதெல்லாம் எங்களிடம் அன்பாக பேசிய தாணு, தங்களுக்கு தேவையான அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்கியபின் என்னைப்பற்றி அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக ‘கங்காரு’, ‘திறந்திடு சீசே’ படங்களின் வியாபாரத்தில் நான் தயாரிப்பாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக கூறியுள்ளார். இது குறித்து அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்” என்றும் தெரிவித்துள்ளார் சிங்காரவேலன்.