தமிழ் திரையுலக கலைஞர்களை வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப்பின் என்றுதான் சொல்லவேண்டியிருக்கும்.. காரணம் இன்றைய நடிகர்களை சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
சிவாஜியை பற்றி நாம் இந்த கட்டுரையை எழுத தொடங்கினால் அது ஒரு பக்கத்தில் அடங்கி விடுகிற விஷயமா என்ன? பல பாகங்கள் கொண்ட புத்தகம் தான் அவரது திரையுலக பயணம்.. இன்று அவரது பிறந்தநாளில் அவரைப்பற்றிய சில சுவராஸ்யமான செய்திகள் மட்டும் உங்களுக்காக..
இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் – பஞ்சுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பீம்சிங்குக்கு ‘பராசக்தி’யில் கொடுக்கப்பட்ட வேலை கலைஞரின் கனல் பறக்கும் வசனங்களை அதில் புதுமுகமாக அறிமுகமான சிவாஜிக்கு சொல்லிக்கொடுப்பதுதான். அப்போது அவர்கள் இருவருக்குமே தாங்கள் இருவரும் சேர்ந்து தமிழ்சினிமாவை உலுக்கி எடுக்கப்போகிறோம் என்பது தெரிந்திருக்க நியாமில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டெக்னி கலர் படமான வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜியின் நடிப்பு இன்றளவும் கட்டபொம்மன் என்ற மாவீரன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று எண்ணும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டது. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய – ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியை நடிப்பு உலகத்திற்கு அழைத்து வந்தது காக்கா ராதாகிருஷ்ணன் தான் என்பதால் அவர்மீது எப்போதும் அலாதியான பிரியம் செலுத்தி வந்திருக்கிறார் சிவாஜி. தனது இறப்புக்கு முன்வரை அடிக்கடி காக்கா ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசுவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார் நடிகர்திலகம். 1956-ல் இவரது திருமணம் நடந்தது. அதை இரண்டு நாட்களாக உடன் இருந்து நடத்திவைத்தவர் சிவாஜிகணேசன் தான்.
சிவாஜி சினிமாவில் நுழைந்திராத சமயம் அது. பத்மினியோ ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தார். ஒரு சமயம் எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தார் பத்மினி. அதில் சிவாஜிக்கு பார்ட்டே இல்லை. ஆனாலும் மேடையில் பின்னால் நின்று உதவி செய்து கொண்டிருந்தார். பத்மினியை கண்டதும், தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவருடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை வெளிப்படையாக கூறினார் சிவாஜி. ஆனால் அப்பொழுது அவர்கள் இருவருக்கும் தெரியாது, தாங்கள் 60 படங்கள் தொடர்ந்து ஜோடியாக நடிக்கப்போகிறோம் என்று. உண்மையிலேயே வியப்பூட்டும் விஷயம்தான் இது
எம்.ஜிஆரை வைத்து வரிசையாக படங்களாக எடுத்து தள்ளிய சாண்டோ சின்னப்பா தேவர், நடிகர்திலகம் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை என்பது திரையுலகம் இன்றுவரை வியக்கும் ஆச்சர்யங்களில் ஒன்று. இதுபற்றி ஒருமுறை தேவரிடம் கேட்டதற்கு, ‘சிவாஜிக்கு ஏற்ற கதை என்னிடம் இல்லை’ என்று ஒரே வரியில் பதில் அளித்தாராம் தேவர்.
‘தூக்குதூக்கி’ படத்தில் சிவாஜிக்காக முதன்முதலாக டி.எம்.சௌந்திரராஜனின் குரலில் பதிவான மூன்று பாடல்களை போட்டுக்காட்டி அவருக்காக சிபாரிசு செய்தார் இசைமேதை ஜி.ராமநாதன். பாடல்களைக் கேட்டு முடிக்கும்வரை எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த நடிகர்திலகம், அங்கிருந்த டி.எம்.எஸ்.ஸின் அருகில் வந்து அவர் தோளைத் தட்டிக்கொடுத்து, “எனக்கான எல்லாப் பாட்டையும் நீயே பாடிடு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேல் நடிகர்திலகத்தின் பாட்டுக்குரலாகப் பரிமளித்தார் டி.எம்.சௌந்தரராஜன்.
1952ஆம் வருடம் பராசக்தி படத்திலேயே நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நடிகை ராஜசுலோச்சனா அறிமுகமாகவேண்டியது. ஆனால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததால் சரித்திரப்புகழ்பெற்ற அந்த வாய்ப்பு கைநழுவி பண்டரிபாய்க்கு போனது.
சிவாஜியை தனது உடன்பிறப்பாகவே நினைத்த நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி, தான் தயாரித்த நாற்பது படங்களில் கிட்டத்தட்ட 17 படங்களை சிவாஜியை வைத்து தயாரித்ததோடு அதில் எண்பது சதவீதம் வெற்றிப்படங்களாகவும் தந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஜனவரி 26ஆம் தேதி பாலாஜியின் திருமண நாள் மட்டுமல்ல, அவருக்கு அதிர்ஷ்டமான நாளும்கூட. அதனால் பாலாஜி தனது தயாரிப்பில் சிவாஜி நடித்த படம் ஒன்று அன்றைய தினம் க்ட்டாயம் வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.