தான் பிறந்த மண்ணையும், தமிழ் சினிமாவையும் தலை நிமிர வைத்த இசைஞானி இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம் இளையராஜாவின் தீவிர ரசிகரான பாலிவுட் இயக்குநர் பால்கி.
இளையராஜா இசையில் தனுஷ்-அமிதாப்பை வைத்து தான் உருவாக்கியுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் இசை வெளியீட்டை அப்படியே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றி, உலகையே அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.
உண்மைதான்.. 1௦௦௦ படங்களுக்கு இசையமைத்த இமாலய சாதனைக்கு சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது. இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார்.
அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல், நடிகை ஸ்ரீதேவி உட்பட இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்தனர்.