22 வருட நட்பை புதுப்பித்த சத்யராஜ்..!

 

மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் பட டைரக்டர்களின் துரோணர் என சொல்லக்கூடிய தகுதியுடையவர் டைரக்டர் ஜோஷி. கிட்டத்தட்ட 34 வருஷங்களாக மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கிற ஜோஷி தற்போது மோகன்லாலை வைத்து ‘லைலா ஓ லைலா’ என்கிற படத்தை இயக்கிவருகிறார்.

‘ரன் பேபி ரன்’ என்கிற ஹிட்டுக்கு பிறகு, தொடர்ந்து ‘லோக்பால்’ என்கிற தோல்விக்குப்பிறகு இவர்கள் இருவரின் கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் வெற்றியின் மீதே அனைவரின் கவனமும் இருக்கிறது. மீண்டும் மோகன்லாலுக்கு ஜோடியாக இந்தப்படத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். மிக முக்கியமான விஷயம் நம்ம சத்யராஜும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சரி.. சத்யராஜ் எப்படி இதில் உள்ளே வந்தார்..? 1993ல் சத்யராஜ் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘ஏர்போர்ட்’..மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களை இயக்கிய இயக்குனர் ஜோஷி, தமிழில் இயக்கிய ஒரே படமும் இதுதான். ஆகவே, தனது தமிழ் கதாநாயகனான சத்யராஜை தான் தற்போது இயக்கிவரும் ‘லைலா ஓ லைலா’வில் ஜோஷி சேர்த்துக்கொண்டதில் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை.

தமிழ்ப்படங்களில் நடித்தால் மட்டுமே போதும் என ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்த சத்யராஜ், தனக்கு மற்ற மொழிகளிலும் உள்ள வரவேற்பால் அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்தவகையில்,முதன்முதலாக மலையாளத்தில் 2௦1௦ல் திலீப்புடன் இணைந்து ‘ஆகதன்’ என்கிற படத்தில் நடித்தார். இது அவருக்கு இரண்டாவது படம்.

அமலாபால்ஆகதன்ஏர்போர்ட்சத்யராஜ்ஜோஷிதிலீப்ரன் பேபி ரன்லைலா ஓ லைலாலோக்பால்