சத்யா – விமர்சனம்

வெளிநாட்டில் இருக்கும் சிபிராஜ், தனது முன்னாள் காதலி ரம்யா நம்பீசன் அழைப்பின் பேரில் சென்னைக்கு வருகிறார். தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி அதை கண்டுபிடித்து தருமாறு அவரிடம் ரம்யா கோரிக்கை வைக்கிறார். ஆனால் சிபிராஜின் விசாரணையில் ரம்யாவுக்கு மகளே இல்லை என பலரும் சொல்ல, குழப்பமாகிறார் சிபிராஜ் இதை ரம்யாவின் கணவன், போலீஸ் உயர் அதிகாரியான வரலட்சுமி உள்ளிட்ட பலரும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதும் சிபிராஜுக்கு தெரிய வருகிறது.

அதேசமயம் ரம்யாவின் கொழுந்தன், கார் மெக்கானிக் சதீஷ் ஆகியோரின் சில நடவடிக்கைகள் சிபிராஜுக்கு சந்தேகம் கொடுக்கிறது. இதை தொடர்ந்து விரியும் காட்சிகள் பல திருப்பங்களுடன் நமக்கு அதிர்ச்சி மேல் கொடுக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன..? குழந்தை விவகாரம் உண்மையா..? கற்பனையா என பல கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிப்படம்.

குழந்தை கடத்தலில் ஆரம்பிக்கும் படம், முடியும் வரை அதே விறுவிறுப்புடன் பயணிக்கிறது. சிபிராஜ் தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனம் செலுத்தி வருவதை இந்த ‘சத்யா’ கேரக்டரும் உறுதி செய்கிறது. கோபம், ஆத்திரம், செண்டிமெண்ட், சந்தேகம், சந்தோசம் என கலவையான உணர்வுகளுடன் பயணிக்கும் சிபிராஜ் அந்த சத்யா கேரக்டராகவே மாறியுள்ளார்.

உண்மையை சொல்கிறாரா, இல்லை அனைத்தையும் மறந்து உளறுகிறாரா என நம்மையே சந்தேக்கப்பட வைக்கும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வழங்கியுள்ள ரம்யா நம்பீசன், திடீரென எடுக்கும் முடிவு நம்மை அதிர்ச்சி ஆளாக்குகிறது. போலீஸ் அதிகாரியாக கெத்தாக வரும் வரலட்சுமி, முதல் பாதியில் சம்பந்தமில்லாத யாரோ ஒரு நபர் போல் பத்தோடு பதினொன்றாக பயணித்தாலும், இடைவேளைக்குப்பின் மீதிக்கதை முழுவதையும் தனது பக்கம் இழுத்துக்கொண்டு தனது இன்னொரு முகத்தை காட்டும்போது நிஜமாகவே அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.

போலீஸ் அதிகாரியாக கடமை ப்ளஸ் காமெடி என கலகலப்பூட்டுகிறார் ஆனந்தராஜ். கொஞ்ச நேரமே வந்தாலும் யோகிபாபுவின் காமெடி செம கலாய்.. காமெடியை ஒதுக்கி கேரக்டர் ரோலில் பயணிப்பதால் சதீஷின் ‘பாபுகான்’ கேரக்டர் அவரை நோக்கி நம் கவனத்தை ஈர்க்கிறது. வினோதினி, நிழல்கள் ரவி உள்ளிட்டோரும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சைமன் கிங்கின் இசையில் ‘யவனா’ பாடலும் அதை படமாக்கிய விதமும் அருமை.. பின்னணி இசையிலும் தடதடக்க வைத்திருக்கிறார் மனிதர் அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகமான ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் ட்விஸ்ட் நம் பல்ஸை அதிகரிக்க வைப்பதென்னவோ உண்மை. குறிப்பாக குழந்தை பற்றிய மர்மம் உடைபடும் இடத்தில் நம்மால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட படம் என்றாலும், அதன் சாயல் துளியும் படியாதவாறு அழகாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்ப் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி..

தனக்கான வெற்றிக்கதையை தேடிக்கண்டு பிடித்ததில் மீண்டும் ஒருமுறை சிபிராஜ் ஜெயித்திருக்கிறார்.

Nathambal Film FactoryPradeep KrishnamoorthyRamya NambesanSathishSibirajSimon K KingVaralaxmi Sarathkumarஅருண்மணி பழனிஆனந்தராஜ்சதீஷ்சத்யாசத்யா – விமர்சனம்சிபிராஜ்சைமன் K கிங்நிழல்கள் ரவிபிரதீப் கிருஷ்ணமூர்த்தியோகிபாபுரம்யா நம்பீசன்வரலட்சுமிவினோதினி