சிபிராஜ் தற்போது நடித்துவரும் படம் ‘சத்யா’.. ஆம். கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு முன் கமல் நடித்த ஹிட் படத்தின் டைட்டிலைத்தான் வைத்திருக்கிறார்கள்.. ஆனால் கதை அந்த சத்யா படத்தின் கதை அல்ல. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ ஷணம் “ திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த ‘சத்யா’. தெலுங்கில் வெளிவந்த ‘ஷணம்’ வழக்கமான தெலுங்கு திரைப்படம் போல் என்றாலும் கூட தமிழுக்காக கதையில் புதிதாக நிறைய விஷயங்களை சேர்த்து உருவாக்கியுள்ளோம் என்கிறார் படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் வழங்க சிபிராஜ் தயாரித்து நடிக்கும் இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக படத்திற்கு பலம் சேர்க்கும் கேரக்டரில் நடித்துள்ளார்.
இதுவரை சிபிராஜ் 12 படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவருடைய லுக்கை மாற்றி புதிதாக காட்ட வேண்டும் என்பது தான் இயக்குனருடைய ஆசையாக இருந்தது. இதை அவரிடம் கூறியதும், நிச்சயமாக நீங்கள் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று சிபிராஜும் முன்வந்தாராம். “இந்த லுக்குக்காக நேரமெடுத்து காத்திருந்து படப்பிடிப்புக்கு சென்றோம் . இந்த கதைக்கு தேவை என்று நான் கேட்ட நடிகர்கள் எல்லோரையும் சிபிராஜ் எனக்கு கொடுத்துள்ளார்” என்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி..
கமலுக்கு எப்படி ‘சத்யா’ திருப்புமுனையாக அமைந்ததோ அதே போல் சிபிராஜுக்கும் இந்த ‘சத்யா’ திருப்பு முனையாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அதேசமயம் இயக்குனர் சொன்ன இன்னொரு விஷயம் தான் பேரதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு ரம்யா கிருஷ்ணனுடன் லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது. ஆனால், சிபிராஜிடம் இயக்குனர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எவ்வளவோ விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். தன்னுடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதான் அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க சிபிராஜ் மறுத்ததற்கான காரணமாம். கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றமாட்டேன் என்கிறாரே இந்த சிபிராஜ்..
படம் ஜூன் இறுதியில் திரைக்கு வருகிறது.