‘சாத்தான் – தி டார்க்’ விமர்சனம்

நடிகர்கள் : எஃப்.ஜெ, ஐரா, மோன பத்ரே, சாந்தினி தமிழரசன்
இசை : அஷ்வின் கிருஷ்ணா
ஒளிப்பதிவு : பாலா ஜி.ராமசாமி
இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம்
தயாரிப்பு : பாப்பின்ஸ் ஸ்டுடியோஸ் – எட்வர்ட்

சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் நரபலி கொடுக்கும் முறையை மையப்படுத்திய திகில் படமாக வெளியாகியிருக்கும் ‘சாத்தான்’ படம் எப்படி இருக்கிறது ?, விமர்சனத்தை பார்ப்போம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைப்பதோடு, சாத்தானுக்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் பலி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அசம்பாவிதங்கள் நடக்கிறது. பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது.

அதே சமயம், நாயகி ஐராவின் அம்மா மோன பத்ரே, விசித்திரமாக நடந்துக் கொள்வதோடு, தன்னை யாரோ இயக்குவதாக சொல்கிறார். திடீரென்று தனது உடலை காயப்படுத்திக் கொள்பவர், அந்த காயங்கள் ஆறுவதற்குள் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஈடுபடுகிறார். நாயகி ஏதோ பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணரும் நாயகன் எஃப்.ஜெ, அவரை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டுக்கு செல்லும் போது, அங்கு கொடூரமான உருவம் ஒன்றை பார்க்கிறார். அந்த உருவத்தை பார்த்த பிறகு அவரிடத்திலும் பல விசித்திரமான உணர்வுகள் ஏற்பட, மறுபக்கம் ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மர்ம மரணங்களின் பின்னணியை அறிந்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரியும், நாயகனும் அதை தடுத்து நிறுத்துவதற்கான வழியை தெரிந்துக் கொள்கிறார்கள். அது என்ன ?, அதை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? இல்லையா ?, ஐராவின் வீட்டில் இருக்கும் அந்த கொடூரமான உருவம் யார்?, அதற்கும் மர்ம மரணங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஃப்.ஜெ, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

பள்ளி மாணவியாக கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா, ஆபத்தான அம்மாவிடம் சிக்கிக்கொண்டு பறிதவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை பதற வைத்து விடுகிறார்.

ஐராவின் அம்மாவாக, மிக பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோன பத்ரே, அதிரடியான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை அலற வைக்கிறார்.

சாந்தினி தமிழரசன் கிளைமாக்ஸ் நெருங்கும் போது வந்தாலும், கதையின் மையப்புள்ளியே அவர் தான். ஆனால், முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், ஊர் மக்கள் என பலர் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒரு வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி விடுகிறார்.

அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்தாலும், அதிக சத்தத்தோடு பயணித்து பார்வையாளர்களுக்கு தலைவலியை கொடுக்கிறது. இருந்தாலும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை பார்வையாளர்கள் நெஞ்சங்களை படபடக்கவும் வைக்கிறது.

படத்தொகுப்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக் இருவரும் பலவித குழப்பங்களோடு காட்சிகளை தொகுத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் கதைக்கும், நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் தொடர்பு இருந்தாலும் அதை தெளிவாக சொல்ல தவறியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன் ராமலிங்கம், தான் சொல்ல வந்ததை பார்வையாளர்கள் மனதில் பயம் ஏற்படும் வகையில் சொல்லியிருந்தாலும், தெளிவாக சொல்ல தடுமாறியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, என்ன நடக்கிறது, என்று புரியாமல் பார்வையாளர்கள் தவிக்கும் அளவுக்கு திரைக்கதை வெவ்வேறு பாதையில் பயணிக்கிறது. இறுதியாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது, மர்ம மரணங்களின் பின்னணியும், அதை தடுத்து நிறுத்துவதற்கான வழியையும் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம், புரியும்படி விவரித்தாலும், அதன் முழுமையான பின்னணி இரண்டாம் பாகத்தில் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கிறார்.

ரசிகர்கள குழப்பமடைய செய்யும் விதத்தில் படம் பயணிப்பது படத்தின் குறையாக இருந்தாலும், பின்னணி இசை மற்றும் சில அதிர்ச்சிகரமான காட்சிகள் மூலம் இந்த ‘சாத்தான்’ நிச்சயம் அச்சுறுத்தும்.

ரேட்டிங் 3/5

satan movie reviewsatan reviewtamil movie satan reviewசாத்தான் திரைப்பட விமர்சனம்சாத்தான் விமர்சனம்தமிழ்ப் படம் சாத்தான் விமர்சனம்