சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷை ஞாபகம் இருக்கிறதா..? கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆளையே பார்க்க முடியவில்லை.. உடல் நலக்குறைவால் இவ்வளவு காலம் இடைவெளி விட்டுவிட்ட ஸ்ரீமகேஷ், மீண்டும் இப்போது ‘சரித்திரம் பேசு’ படத்தின் மூலம் டைரக்சன் தொப்பியை அணிந்திருக்கிறார்.
அகிலன் படத்தில் ஹீரோவாக நடித்த சரவணன், இந்தப்படத்தில் வில்லனாக.., இல்லையில்லை ஆண்டி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளரான யோகேஸ்வரன் போஸ் ஒரு ஹீரோவாகவும் கிருபா என்பவர் முக்கியமான ஹீரோவாகவும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் கன்னிகா என்கிற தமிழ்ப்பெண் கதாநாயகியாக நடிக்கிறார். ‘பசங்க’ படத்தில் சின்னப்பொண்ணாக நடித்த தாரணி இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். நகைச்சுவை வேடத்திற்கு பொறுப்பு ஏற்றிருப்பவர் கஞ்சா கருப்பு.
தேவாவிடம் பல வருடங்கள் கிடாரிஸ்டாக இருந்த குமார் என்பவர் இந்தபடத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறியுள்ளார். இன்று காலை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் பேரரசு, ராஜ்கபூர், சினேகன், ஸ்ரீகாந்த் தேவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முதல் ஆளாக மைக் பிடித்த கலைப்புலி தாணு பேசிவிட்டு உடனே கிளம்பிவிட, அடுத்து பேச வந்த இயக்குனர் பேரரசு, படத்தின் நாயகி பக்கத்தில் கஞ்சா கருப்பு அமர்ந்திருப்பதை பார்த்தார். உடனே, “திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” என்று பாடியவர், “இதுவரை பல விழாக்களில் பார்த்துவிட்டேன். கஞ்சா கருப்பு சரியாக கதாநாயகி பக்கத்தில் தான் போய் உட்காருகிறார்.. இனி அடுத்தடுத்த விழாக்களில் அவரை ஆண்கள் பக்கத்தில் உட்காரவைக்க வேண்டும்” என காமெடியாக கிண்டல் செய்து பேசினார்.
அடுத்து பேசவந்த இயக்குனர் ராஜ்கபூரும் பேரரசுவின் பேச்சுக்கு பின்பாட்டு பாடினர். இதையெல்லாம் சிரிப்புடனே கேட்டுக்கொண்டிருந்த கஞ்சா கருப்பு கடைசியாக பேச வந்தவர், “கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? எங்க அண்ணன் என்ன பேசினாலும் என்னை ஒண்ணும் பாதிக்காது” என நாசூக்காக பதில் கொடுத்து யுத்தத்தை முடித்து வைத்தார்.