மீண்டும் டபுள் ஆக்‌ஷனில் இறங்கினார் சரத்குமார்..!

சரத்குமாரின் வெற்றிப்பட பட்டியலை எடுத்துப்பார்த்தால் அதில் பல படங்கள் அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்களாகத்தான் இருக்கும். ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘சூர்யவம்சம்’ ஆகிய படங்கள் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள்.

சமீபகாலமாக கதாநாயகன் பாத்திரம் அல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக அதுவும் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘சண்டமாருதம்’. படத்தை இயக்குவது சரத்குமாரின் ஆஸ்தான் இயக்குனர்களில் இன்னொருவரான ஏ.வெங்கடேஷ்.

இதில் ‘எதிரியை எதிரியா பாத்து பழக்கமில்லை.. எரிச்சுத்தான் பழக்கம்” என்கிற கொள்கையை உடைய வில்லனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் வில்லனாக நடிக்கும் முதல் படம் இதுதான். சரத்குமாரின் வெற்றிக்கூட்டணியில் எப்போதும் பங்குவகிக்கும் ஒருவரான விஜயகுமாரும் இதில் நடிக்கிறார். இது தவிர இயக்குனர் சமுத்திரகனியும், பிரபல கன்னட நடிகருமான அருண்சாகரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். திரைக்கதை வசனத்தை ஏ.வெங்கடேஷுடன் இணைந்து பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே-14ல் தொடங்க இருக்கிறது.

Sarathkumarசரத்குமார்சூர்யவம்சம்நட்புக்காகநாட்டாமை