“சினிமாவுல நான் நல்ல நிலைமைக்கு வந்தா என் படத்தை டைரக்சன் பண்ற வாய்ப்பை உங்களுக்கு கொடுப்பேன்”- இது தனது ஆரம்ப கால நண்பர்களான முருகன், ஆனந்த் இருவருக்கும் சந்தானம் கொடுத்திருந்த வாக்குறுதி. சொன்னபடி அவர்களை முருகானந்த் என இரட்டை இயக்குனர்களாக்கி தன்னை வைத்து ‘இனிமே இப்படித்தான்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் தந்து, கொடுத்த வாக்குறுதியை காப்பற்றிவிட்டார்.
சந்தானத்தின் ஜோடியாக ஆஸ்னா ஜாவேரி மற்றும் அகிலா கிஷோர் நடிக்க, படம் முழுவதும் வரும் முக்கிய வேடத்தில் தம்பி ராமையா நடித்துள்ளார். புதுமுகம் சந்தோஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இதற்குமுன் இரண்டு படங்களை பர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்த சந்தானம் இந்தப்படத்தை தானே நேரடியாக தயாரித்துள்ளார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சந்தானத்தின் நண்பர்களும் அவரது நலம் விரும்பிகளுமான ஆர்யா, உதயநிதி, இயக்குனர் எம்.ராஜேஷ், கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சந்தானம், “நான் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என ஒருபோதும் சொன்னதில்லை.. என் மீது அன்புகொண்ட பலரின் படங்களில் நான் காமெடியனாகவும் தொடர்ந்து நடிக்கத்தான் போகிறேன். அதேபோல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை என சொல்லிவந்தார்கள். இனிமேல் அனைவரையும் சந்திப்பேன்.. கேள்விகளுக்கு பதில் சொல்வேன்.. பேட்டி கொடுப்பேன்.. ஏன்னா.. இனிமே இப்படித்தான்” என கடைசியாக டைட்டில் பஞ்ச் வைத்து முடித்தார்.