இயக்குநர் சீமான் மற்றும் சுசி கணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் ‘காவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா, படத்தை இணைந்து தயாரிப்பதுடன், கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
பணத்துக்காக கொலைசெய்யும் கூலிப்படையினர் பற்றிய படம் இது. நிறைய ஆராய்ச்சிகள் செய்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் நாகேந்திரன். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பேசிய சமுத்திரக்கனி “இன்று போலீஸ் அதிகாரிகள் அல்லது மற்ற எந்த அதிகாரிகளாக இருக்கட்டும்.. அதில் பலபேரின் மகன்கள் தங்களையும் அதிகாரிகளாகவே நினைத்துக்கொண்டு அராஜகம் பண்ணி வருகின்றனர். அவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது..? இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல இங்கே சென்னையில் நடக்கும் பல கொலைகள் கூலிக்காக செய்யப்படுகின்றன. இதில் கொன்றவர்களுக்கும் கொல்லப்பட்டவருக்கும் தாங்கள் யாரென்றே தெரியாதது தான் வினோதம்.. இந்த விஷயத்தைப்பற்றி நாம சொல்லலைன்னா வேற யார் சொல்லுவா என்றுதான் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என இந்தப்படத்தில் தான் நடிக்க முன் வந்த காரணத்தை குறிப்பிட்டார்.