தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண் என்பவர் சாய் தன்ஷிகாவை சந்தித்து, உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழு கதையையும் சொன்னாராம்.
அதன்பின் நடந்ததை சாய் தன்ஷிகாவே விவரிக்கிறார். “‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. இந்த படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுவது முழு உண்மையல்ல. ஆனால் ரசிகர்களுக்கு இரட்டை வேடமாகத்தான் தெரியும். இதைப் பற்றி மேலும் விவரமாக சொல்லக்கூடாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன்.. ‘மேளா’ நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்த படம் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது” என்கிறார் சாய் தன்ஷிகா..
இந்த படத்தில் இவருக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யாதேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார் சாய் தன்ஷிகா.. “பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குனரின் பாராட்டை பெற்றேன்” என்கிறார் சாய் தன்ஷிகா..