நேர்மைக்கு மறுபெயராக விளங்கும் அரசு அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார் என்றால் படம் சம்பந்தப்பட்ட ஒருவர் அவரது செயல்பாடுகளால் ஏதோ ஒருவிதத்தில் சகாயத்தின் மனதை தொட்டிருக்கவேண்டும்.. உண்மைதான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் ‘இணைய தலைமுறை’ படத்தின் தயாரிப்பாளர் இளந்திருமாறன்.
இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள ‘இணைய தலைமுறை’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தான் சகாயம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் இயக்குனர் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சகாயம் பேசியதாவது,
“இணையதலைமுறை படத்தை தயாரித்தவர் இளந்திருமாறன். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இளந்திருமாறன். அப்போது நான் அந்த பகுதியில் குடியிருந்தேன். கலால்துறையில் பணியாற்றினேன். இளந்திருமாறனை பார்த்தது கூட இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும், என் மனைவியும் அவருக்கு ஓட்டு போட்டோம்.
2011ல்தான் இவரை சந்தித்தேன். 2009ல் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு பின் நான் மனதளவில் நொந்துபோய் இருந்தேன். தொன்மை, வரலாறு வாய்ந்த தமிழ்சமூகம் ஈழத்தில் 2 லட்சத்தை இழந்து இருந்தது. 21 நுாற்றாண்டில் எந்த சமூகமும் சந்திக்காத இழப்பை சந்தித்த. அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள்,விஞ்ஞானிகள், படைப்பாளிகள் இருந்தார்கள். ஆனால், நல்ல தலைவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
பல ஆயிரம் பெண்கள், அப்பாவி குழந்தைகள் பலநாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. அப்போது கொதித்து போனேன். அது வெறி அல்ல, நெறி. நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்ல, லஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான்.
பின்னர் ஒரு கட்டத்தில் பேசிய இளந்திருமாறன் உங்கள் வங்கி கணக்கில்பணம் இல்லை என்று தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியை விட நேரிடும். 8 ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த 8 ஆண்டுக்கான உங்கள் சம்பளத்தை எத்தனை லட்சமாக இருந்தாலும் நான் தருகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மை, கல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை துாய்மைப்படுத்தினால் அரசியலும் துாய்மை ஆகிவிடும் என்றேன். இளந்திருமாறன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்பு மிக்கவர்கள். அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது. அவர்கள் கல்லுாரி தேர்தலை பற்றி அங்கே நடக்கிற தில்லுமுல்லு பற்றி இந்தபடம் பேசுகிறது. மாணவர் தேர்தல் தில்லுமுல்லு மட்டுமல்ல, மாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
கல்வி வணிக மயம், கல்விமுறை, குழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசை திணப்பு பற்றிய அப்பா என்ற படத்தை இயக்குனர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார். இந்த படங்கள் வெற்றி அடைய வேண்டும்
இவ்வாறு சகாயம் பேசினார்.