ரியாஸ்கான் ஹீரோவாக நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’..!

தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இருமொழிப்படமாக தயாராகி உள்ள படம் ‘உன் காதல் இருந்தால்’. ஹாசிம் மரிக்கர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், மலையாள நடிகர் மஃபுல் சல்மான் (மம்முட்டியின் சகோதரர் மகன்), ரியாஸ்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் மலையாள நடிகை லேனா, மஃபுல் சல்மான், இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா (கதாநாயகி), மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மன்சூர் அலிகான், உமா ரியாஸ், ஷாரிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் ஹாசிம் மரிக்கர் கூறும்போது, “இப்படத்தின் பெயர் தான் காதல் சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் படத்தில் காதல் பற்றி ஒன்றும் இருக்காது. உச்சபட்ச த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகன் தான். அது ரியாஸ்கான் மட்டும் தான். அவரை தவிர மற்ற அனைவரும் வில்லன்கள் தான். இப்படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். புதுமையான முயற்சிகளை கையாண்டிருக்கிறோம்” என்றார். .

நடிகர் ரியாஸ்கான் பேசும்போது, “நானும் இதுவரை 300 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் 150 படங்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனாலும், இந்த படத்தில் உண்மையாகவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து இக்கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

ஸ்ரீகாந்த் பேசும் போது, “இந்த படத்தில் இறுதியாக தான் வந்து சேர்ந்தேன். ஹாசிம் எனக்கு நல்ல நண்பர். மிகப்பெரிய தயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர். பெரிய படங்களை கொடுத்த நிறுவனம். இவரும் தயாரிப்பில் தான் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இயக்குநராக வந்துவிட்டார். மலையாளத்தில் தான் இப்படத்தை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் இயக்கியிருக்கிறார். இப்படம் சைகாலாஜிக்கல் திரில்லர் படம். திரைக்கதையில் நிறைய சவால்கள் இருக்கிறது. அதை திறமையாக கையாண்டிருக்கிறார்.

நடிகை லேனா மிகச் சிறந்த நடிகை. பிற மொழிகளில் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். தமிழில் அனேகனுக்கு பிறகு ஏன் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. சிறந்த நடிகரான விக்ரமுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்பதை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். தமிழில் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். எல்லோரிடமும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கும். அதுபோல் லேனாவிடமும் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மன்சூர் அலிகான் பேசும்போது, “மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு வந்து இரு மொழிகளிலும் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாசிம் மரிகார். மம்முட்டி குடும்பத்திலிருந்து அவரது மகனும் மற்றும் தம்பி மகனும் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். அதுபோல் அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் சினிமாவிற்கு வரவேண்டும். விவசாயம் செய்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மம்முட்டியுடன் நடிப்பது என் லட்சியம். தமிழில் அவருடன் மூன்று படங்கள் நடித்துவிட்டேன். அனைத்தும் நூறு நாட்கள் படம். மலையாளத்தில் அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய ஏக்கமாக உள்ளது.

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, எத்தனை கோடி செலவழித்து எடுத்த படமாக இருந்தாலும் சரி ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நேராக சென்று அடிப்பேன். என் ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவரை சும்மாவிட மாட்டேன். அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக வசூலித்துக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். ரூ.10க்கு மேல் வசூலிக்கக்கூடாது” என கொஞ்சம் சூடாகவே பேசினார்.

இறுதியாக, ‘உன் காதல் இருந்தால்’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹாசிம் மரிகரின் அடுத்த படத்தின் பெயர் (4K) ‘கனவில் கண்ட காதல் கவிதை’ வெளியிடப்பட்டது.

4Kஅனேகன்இருட்டு அறையில் முரட்டு குத்துஉன் காதல் இருந்தால்உமா ரியாஸ்கனவில் கண்ட காதல் கவிதைசந்திரிகாமஃபுல் சல்மான்மன்சூர் அலிகான்மம்முட்டிரியாஸ்கான்லேனாவிக்ரம்ஷாரிக்ஸ்ரீகாந்த்ஹாசிம் மரிக்கர்