‘ரெட் லேபில்’ விமர்சனம்

நடிகர்கள் : லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த், அனுமோகன்
இசை : கைலாஷ் மேனன்
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
இயக்கம் : கே.ஆர்.வினோத்
தயாரிப்பு : ரெவ்கென் பிலிம் பேக்டரி – லெனின்

கோவையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. பேராசிரியர்களையே மிரட்டும் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் கொண்ட மாணவர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தலைவர் ஆனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், பேராசிரியர்கள் சிலர் அந்த மாணவரை எதிர்த்து மற்றொரு மாணவரை போட்டியிட வைப்பதோடு, அவர் வெற்றி பெறுவதற்காக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தலைவரான தனது நண்பர் நாயகன் லெனினின் உதவியை நாடுகிறார்கள்.

கல்லூரி காலத்தில் இருந்தே அடிதடி என சுற்றிக்கொண்டிருந்த நாயகன் லெனின், தற்போது திருந்தி வாழும் நிலையில், மீண்டும் கல்லூரி தேர்தல், மோதல் ஆகியவை வேண்டாம் என்று தவிர்க்கிறார். ஆனால், அதே கல்லூரியில் படிக்கும் அவரது காதலியின் வற்புறுத்தலால் தேர்தல் களத்தில் பயணிக்க சம்மதிக்கிறார். தேர்தல் நடக்கிறது, லெனின் ஆதரவு பெற்ற மாணவர் வெற்றி பெறுவதால், அரசியல் செல்வாக்கு கொண்ட மாணவர் அவர் மீது கடும் கோபம் கொள்கிறார்.

இந்த நிலையில், லெனின் காதலுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. தன் காதல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனது காதலியை தேடி கல்லூரி வளாகத்திற்குள் செல்லும் லெனின், சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு திட்டம் போடுகிறார். அந்த சிக்கல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று தோற்றத்திலும், நடிப்பிலும் வேறுபாட்டை காட்டுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. அளவான நடிப்பு மூலம் தனது பணியை நிறைவாக செய்திருக்கும் நாயகி அஸ்மின், திரைக்கதையில் முக்கியத்துவத்தோடு பயணித்து, இறுதியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பனின் பணி எளிமையாக இருந்தாலும், படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் பணி படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துக்கொண்டு, எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான காட்சிகளை பல திருப்பங்களுடன் சொல்லி, பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.

ரேட்டிங் 3.2/5

red label movie reviewred label reviewtamil movie red label reviewதமிழ்ப் படம் ரெட் லேபில் விமர்சனம்ரெட் லெபில் விமர்சனம்ரெட் லேபிள் திரைப்பட விமர்சனம்