எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் அரசியல் பேசி அதிரவைத்த ரஜினி..!

மதுரவாயல் அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 30ம் ஆண்டு விழா மற்றும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தலைவர் ஏசிஎஸ் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் 6 அடி உயர எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை மொரீசியஸ் குடியரசு துணை தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், எம்ஜிஆருடன் பணிபுரிந்தவர்கள், அவரது உதவியாளர்கள், சினிமா கலைஞர்கள், நடிகர், நடிகைகள், முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவு பரிசு, விருது வழங்கப்பட்டது. பின்னர், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இது பல்கலைக்கழக விழா என்று நினைத்தால் கட்சி மாநாடு போல் உள்ளது. 1996ல் இருந்து அரசியல் சூழ்நிலைகளை கவனித்து வருகிறேன். நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மேடையில் அரசியல் விஷயங்களை பேசக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எம்ஜிஆர் சிலையை திறக்க எனக்கு தகுதி இருக்கிறதா என பல முறை நினைத்தது உண்டு.

எம்ஜிஆருக்கு சினிமா தான் தாய் வீடு. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தற்போது அதிமுக ஆட்சியில் தான் நடக்கிறது. சினிமா உலகம் எனக்கு மட்டும் தாய் வீடு அல்ல. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் அதுதான் தாய் வீடு. எம்ஜிஆருக்கும் எனக்கும் உள்ள பந்தம் யாருக்கும் தெரியாது.

சினிமா உலகத்தில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாது என ஏன் வெறுக்கிறார்கள் என தெரியவில்லை. நடிகர்களாகிய நீங்கள் உங்கள் நடிப்பு வேலையை மட்டும் பாருங்கள் என்கிறார்கள். நான் என் வேலையை ஒழுங்காக செய்து வருகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யவில்லையே.

1996ல் இருந்து அரசியல் சம்பந்தமானவர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். கருணாநிதி, மூப்பனார், சோ போன்றவர்களிடம் பழகி கொஞ்சம் அரசியல் கற்றுள்ளேன். எனக்கும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். ஆனால் ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை டிஸ்கரேஜ் பண்ண வேண்டாம்.

அரசியல் பூ பாதை இல்லை. அதில் முள், கல், பாம்பு உள்ளது என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வருகிறேன். திட்டக்கூடிய அரசியல் வேண்டாம். சினிமாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. உண்மைதான். எம்ஜிஆர் ஒரு யுக புருஷர். எம்ஜிஆர் நல்லாட்சி கொடுத்தார். அவர் ஏழைகளுக்காகவும், சாமானிய மக்களுக்காகவும், அடித்தள மக்களுக்காகவும் நல்லாட்சி கொடுத்தார். எம்ஜிஆர் கொடுத்த அந்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்.

மக்கள் ஆசிர்வாதத்தாலும், திறமைசாலிகள் உடன் இருப்பதாலும், நல்லவர்கள் துணை இருப்பதாலும் என்னால் நல்லாட்சி வழங்க முடியும். உண்மையான, நேர்மையான சாதி, மதவேறுபாடு இல்லாத தூய்மையான ஜனநாயக அரசியல்தான் ஆன்மிக அரசியல். எல்லாமே பரமாத்மாதான். இறை நம்பிக்கை இருப்பது ஆன்மிக அரசியல். ஏன் திராவிடத்தில் இல்லையா?.

ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள். ஜெயலலிதா இருக்கும்போது அரசியலுக்கு ஏன் வரவில்லை. பயமா என கேட்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும் போதே 1996லேயே நான் அரசியல் பேசியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டில் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதனால் வரப்பார்க்கிறாயா என கேட்கிறார்கள். இங்கே தலைவனுக்கும், தலைமைக்கும் வெற்றிடம் இருக்கிறது. அதனால் நான் அரசியலுக்கு வருகிறேன். ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நிலை சரியில்லாதது போன்ற காரணங்களால் தமிழகத்திற்கு தலைமை தேவை. தலைவரும் தேவை. அந்த இடத்தை நான் நிரப்ப வருகிறேன். நம்ம பக்கம் ஆண்டவன் இருக்கிறான்.

இது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா. நான் சிவாஜி ரசிகன். 1950களில் எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக இருந்தார். 1952ல் சிவாஜி, எம்ஜிஆருக்கு போட்டியாக வந்தார். சிவாஜி திறமையைப் பார்த்து எம்ஜிஆர் அவ்வளவு தான் என்றார்கள். ஆனால் எம்ஜிஆர் நாடோடி மன்னன் போன்ற படங்களில் நடித்து சாதனை படைத்தார். ஜெயலலிதா ஒரு நல்ல தலைவியாக இருந்தார். அவர் கட்சியை நல்ல கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் நல்ல தலைமை இல்லை. ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் வேளையில் எம்ஜிஆர் கட்சியான அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை இந்த அளவுக்கு கூட கொண்டாடவில்லை” இவ்வாறு ரஜினி பேசினார்.

Kollywood NewsMGR StatueRajinikanthSuperstarTamilcinemaTamilnaduTamilnadu Politicsஎம்.ஜி.ஆர்சூப்பர் ஸ்டார்தமிழ்நாடுதமிழ்நாடு அரசியல்ரஜினிகாந்த்