ராஜாதி ராஜா – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : மம்முட்டி, ராய் லட்சுமி, உன்னி முகுந்தன், முகேஷ், ஜாய்மேத்யூ, லேனா, ஜோஜூ ஜார்ஜ், ராகுல்தேவ்.

இசை : கார்த்திக்ராஜா, கோபிசுந்தர் (பின்னணி இசை)

ஒளிப்பதிவு : ஷாஜி

கதை : உதயகிருஷ்ணா, சிபி கே.தாமஸ்

இயக்கம் : அஜய் வாசுதேவ்

பொள்ளாச்சி அருகில் பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டு அங்கேயே உணவு விடுதி நடத்தி வருகிறார் மம்முட்டி.. மனைவி லட்சுமிராய் மற்றும் பள்ளி செல்லும் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்..

ஊரிலிருந்து வரும் லட்சுமிராயின் முறைமாமன் ஜோஜூ ஜார்ஜின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது சில சிக்கல்களில் சிக்குகிறார் மம்முட்டி. மம்முட்டியின் கோழைத்தனத்தை கண்டு ஏளனம் செய்யும் ஜோஜூ ஜார்ஜ் பங்க்கில் வந்து தகராறு செய்யும் வட இந்திய ஆட்கள் நான்கு பேரை தாக்கிவிட்டு தப்பிவிடுகிறார்..

அதனால் போலீஸ் மம்முட்டியை கஸ்டடியில் எடுத்து அடித்து துவைத்து விசாரிக்கிறது. ஆனால் விசாரணை பங்க் தகராறு என்பதற்காக அல்ல என்பது மம்முட்டிக்கு புரிகிறது. வட இந்திய ஆட்கள் அவரை விட்டுவிடுமாறு போலீசாரிடம் சொல்ல மம்முட்டி விடுவிக்கப்படுகிறார்.

அந்த கும்பல் மீண்டும் வந்து உணவு விடுதி மீது கல்வீசி தாக்க, அதன் விளைவாக மனைவி, குழந்தை மற்றும் ஜோஜூ ஜார்ஜையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்கிறார் மம்முட்டி.. ஆனாலும் வட இந்திய ஆட்கள் விடாமல் பின் தொடர்கிறார்கள்.

அப்போதுதான், தன்னை ஏளனம் செய்த ஜோஜூ ஜார்ஜே பயத்தில் உச்சா போகும் வகையில் எதிரிகளிடம் தன் சுயரூபம் காட்டும் மம்முட்டி அவர்களை அடித்து விரட்டுகிறார்… மம்முட்டி யார்.. அவர் ஏன் அமைதியாக இருந்தார்.. வட இந்திய வில்லன்கள் அவரை தொடரவேண்டிய காரணம் என்ன? இதற்கெல்லாம் விடை இன்டர்வெல்லுக்கு பிறகு..

இதுவரை சொன்ன கதையை படிக்கும்போதே நம் சூப்பர்ஸ்டாரின் பிளாக் பஸ்டரான ‘பாட்ஷா’ உங்கள் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டுமே.. கிட்டத்தட்ட அது தான் உண்மையும். காக்கி பேண்ட், சட்டை போட்ட ஆட்டோ ட்ரைவர் ரஜினிக்கு பதிலாக, இதில் வேட்டி கட்டிய மம்முட்டி.. அவ்வளவுதான்.. மற்றபடி மும்பை டான்.. அவர்களுக்குள் மோதல்.. நல்ல கலெக்டர்.. டான் மம்முட்டியின் மர்ம மரணம்.. இறுதியில் பாம்பே விளான் ரிட்டர்ன்.. என எல்லாமே பாட்ஷா.. பாட்ஷா.. பாட்ஷாவே தான்.

20 வருடங்களுக்கு முன் துறுதுறு ரஜினி செய்த கேரக்டரில் இப்போதைய மம்முட்டியை பொருத்திப்பார்க்க முடியவில்லை என்றாலும் கூட தன் வகையில் அந்த கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் மம்முட்டி. இண்டர்வல் பிளாக்கில் அவர் விஸ்வரூபம் எடுப்பதை இன்னும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். படத்திற்கு பக்கபலமாக இருந்து மெருகேற்ற வேண்டிய கோபிசுந்தரின் பின்னணி இசை நன்றாகவே சொதப்பிவிட்டது.

படத்தில் மம்முட்டியை தவிர நம்மை கவர்வது வீண் வம்பை தவணை முறையில் விலைக்கு வாங்கும் ஐயப்பன் குட்டியாக நடித்திருக்கும் ஜோஜூ ஜார்ஜ் தான். அவரது சலம்பல்களும் மம்முட்டியின் முன்னே சீன் போடும் இடங்களும் பின்னர் மம்முட்டியின் உண்மை சொரூபம் கண்டு பம்முவதும் என கலக்கியிருக்கிறார் மனிதர்.

அட லட்சுமிராயா இது..? படத்தில் வரும் அனைத்து காட்சிகளிலும் மாடர்ன் உடைகளோ, கவர்ச்சி உடைகளோ உடுத்தாமல் சேலை மட்டுமே கட்டி வரும் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்திருக்கிறார் லட்சுமி ராய். ஸாரி..ராய் லட்சுமி.

தலைமை செயலக அதிகாரியாக வரும் சித்திக், தாதாவாக வரும் ஜாய்மேத்யூ, கூலிப்படை ராகுல்தேவ் உட்பட அனைவரும் ஓகே தான்.. பூர்ணா தான் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்.. சரி… முன்னணி இளம் கதாநாயகனாக நடித்துவரும் உன்னி முகுந்தன் கூட கிளைமாக்ஸ் பாடலுக்கு மட்டும் வந்துபோவது ஆச்சர்யம் தான்.

இந்தப்படத்தின் கதையை உதயகிருஷ்ணா, சிபி கே.தாமஸ் என இரண்டு பேர்(!?) எழுதியுள்ளார்கள்.. பாட்ஷாவை அப்பட்டமாக காப்பி அடித்து எழுதுவதற்கு இரண்டு பேரா..? ஒரு உதவி இயக்குனரே இந்த வேலையை செய்துவிட்டு போய்விடுவாரே.. இந்தப்படத்தின் இயக்குனர் அஜய் வாசுதேவ் மம்முட்டியிடம் எப்படி கதை சொல்லி மயக்கினார் என்பது படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தபின்னும் கூட விலகாத ஆச்சர்யம்.

ரிசல்ட் : பாட்ஷாவை அணு அணுவாக ரசித்தவர்களுக்கு பெரிய ஆச்சர்யம் எதையும் தரவில்லை இந்த ‘ராஜாதி ராஜா’

உன்னி முகுந்தன்ஜாய்மேத்யூஜோஜூ ஜார்ஜ்மம்முட்டிமுகேஷ்ராகுல்தேவ்ராஜாதி ராஜா - விமர்சனம்ராய் லட்சுமிலேனா