நடிகர்சங்க பொதுச்செயலாளர் ராதாரவியை பொருத்தவரை அதிக அளவில் சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை.. ஆனால் அப்படி கலந்துகொண்டால் சுவராஸ்யத்திற்கும் பஞ்சம் இருக்காது.. மீடியாவுக்கு கிடைக்கும் தீனிக்கும் பஞ்சம் இருக்காது. நேற்று நடைபெற்ற ‘முத்துக்குமார் வாண்டட்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் தனது அரைமணி நேர பேச்சினால் கலகலப்பூட்டினார் ராதாரவி.
தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் என மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ‘முத்துக்குமார் வாண்டட்’. சரண், நஷீரா என மலேசிய முகங்களுடன் பாத்திமா பாபு, நிழல்கள் ரவி என நம்ம ஊர் ஆட்களும் நடித்திருக்கிறார்கள். சுந்தரா என்பவர் இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் படமாக இதை இயக்கியுள்ளார் மலேசிய இயக்குனர் பத்மனாபன்.. அவரது தந்தை முனியாண்டி கேசவன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். மலேசிய அரசாங்கத்தால் கௌரவமிக்க ‘டத்தோ’ பட்டத்தை பெற்றவர் ராதாரவி. அதனாலேயே இந்தப்படக்குழுவினரை பாராட்டி பேசி, இசைத்தகட்டை வெளியிட, ராதாராவி வந்திருந்தார். உடன் கங்கை அமரனும் வந்திருந்தார்.
விழாவில் ராதாரவி பேசும்போது, “என்னை பார்க்கும் பலரும் சார் யூடியூப்ல உங்க பேச்சை கேட்டேன் சார்.. உங்க பேச்சுக்கு நான் ரசிகன் சார் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். காரணம் சமீபகாலமாக இண்டர்னெட்காரர்கள் தான் என்னை பலமடங்கு புகழ்பெற செய்துவிட்டார்கள்.. அதற்கு அவர்களுக்கு நன்றி. நான் கிட்டத்தட்ட 290 படங்களில் நடித்துள்ளேன்.. ஆனால் அந்த நடிப்பு வாங்கிக்கொடுக்காத பேரை இன்று யூடியூப் வாங்கித்தந்துள்ளது” என வஞ்சப்புகழ்ச்சியாக இணையதள விமர்சகர்களை ஒரு பிடிபிடித்தார் ராதாராவி.