கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவராக, தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய தூணாக விளங்கிய பஞ்சு அருணாசலம் இன்று காலமானார். 75 வயதான இவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே மரணத்தை தழுவியுள்ளார்.. தமிழ் திரையுலகிற்கு இவரது இழப்பு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
தான் கதைவசனம் எழுதிய ‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதில் இவரின் பங்கு அதிகம் உண்டு. அதுமட்டுமல்ல ரஜினியின் திரையுலக பயணத்தில் வெற்றிப்படிகளாக அமைந்த பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, குரு சிஷ்யன், வீரா ஆகிய படங்களை தயாரித்தவரும் இவர்தான்.
அதேபோல இவர், செவிக்கினிய பாடல்களை கொடுத்த அற்புதமான பாடலாசிரியரும் கூட.. சமீபத்தில் கூட கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் கௌதமின் தாத்தா முத்துராமன், தந்தை கார்த்திக் என மூன்றாம் தலைமுறை வாரிசுக்கும் பாடல் எழுதிய பாடலாசிரியர் என்கிற பெருமையை பெற்றார் பஞ்சு அருணாசலம்..
இவரது மகன் சுப்பு பஞ்சு தற்போது தமிழ்சினிமாவில் நல்லதொரு குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவரது இரண்டு மகள்களும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா சாந்தியடையவும் நாம் பிரார்த்திப்போம்..