கபாலி டீசரின் இறுதி வினாடிகளில் ரஜினி எண்பதுகளின் லுக்கில் தலையை கோதியபடி வலமாக நடந்து வரும் காட்சி நிச்சயம் ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கும். ஆனால் இந்தக்காட்சி படமாக்கப்பட்டபோது ரஜினிக்கு சரியான காய்ச்சலாம். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தார் ரஜினி என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு..
மேலும் இந்தப்படத்தை பற்றி ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கூறிய தாணு, “ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு மூன்று இயக்குனர்களை வரிசையாக தேர்வு செய்தோம்.. அதில் கௌதம் மேனனும் ஒருவர். ஆனால் கதையை தயார் செய்ய அவர் நிறைய கால அவகாசம் கேட்டார். அந்த நேரத்தில் தான் ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் ரஞ்சித்திடம் அப்பாவுக்கு தேவையான கதை இருப்பதாக சொல்ல, அதைக்கேட்டு இம்ப்ரெஸ் ஆகி அவரையே ஒகே செய்தோம்” என கபாலி ஜாக்பாட் ரஞ்சித்துக்கு அடித்த கதையையும் கூறினார்.