நீடிக்கிறது ‘ரஜினி’ பட டைட்டில் சிக்கல்..!

‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’… இந்த டைட்டில் தான் பாலிவுட்டில் தயாராகி இருக்கும் ஒரு படத்தின் சிக்கலுக்கே வழி வகுத்திருக்கிறது. இந்தப்படத்தில் ரஜினியைப்பற்றி தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினிகாந்தின் பெயரை வைத்து உருவாகும் இந்தப்படம் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி விடும் என்கிற எண்ணத்தில் தான் ரஜினி தரப்பில் இருந்து முதன்முதலாக ஒரு படத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தங்கள் படம் நிச்சயமாக இல்லை என்றும், சொல்லப்போனால் ரஜினிக்கும் இந்தப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றும் கூறிய இயக்குனர் பைசல் சைய்ப், ரஜினிக்காக தங்கள் திரைப்படத்தை போட்டுக்காட்டி உண்மையை அவருக்கு நிரூபிக்க வாய்ப்பு தருமாறு, ரஜினிக்கு வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் ரஜினி தரப்பிலிருந்து அவரது லாயர் மட்டுமே படத்தை பார்த்தார். இந்நிலையில் தயாரிப்பாளரின் பணம் வீணாக முடக்கப்படுவதை விரும்பாதாலும் படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிட வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாலும் படத்தின் பெயரில் உள்ள ‘காந்த்’தை மட்டும் எடுத்துவிட்டு ‘மெய்ன் ஹூன் ரஜினி’ என பெயரை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் இயக்குனர் பைசல் சைய்ப்.

ஆனாலும் ரஜினி தரப்பில் இருந்து அவரது லாயர் சொல்லும்போது, “‘மெய்ன் ஹூன் ரஜினி’ என அவர்கள் பெயரை மாற்றினாலும் கூட ரஜினி என்கிற பெயரையே டைட்டிலில் இருந்து எடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதுவரை நாங்கள் எடுத்த தீர்மானத்தில் இருந்து மாறுவதாக இல்லை” என்று கூறியிருக்கிறார். நீதிமன்றம் இதன் மீதான விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறது. தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் நட்டம் இயக்குனருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் தான் என்பதை யார் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பது..?

மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்ரஜினிகாந்த்