அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது மட்டும் அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ‘என்னும் நிண்ட மொய்தீன்’ என்ற படம் உருவாகி வருகிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் – காஞ்சனமாலா ஜோடியின் காதலை பற்றிய படம்தான் இது.
இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான விமல் என்பவர் இயக்குகிறார். இதில் மொய்தீன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஞ்சனமாலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘பூ’, ‘மரியான்’ படங்களில் நடித்த நம்ம பார்வதி. ஆனால் உண்மைச்சம்பவங்களை படமாக்கும்போது ஏற்படும் சிக்கல் தற்போது இந்த படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. 6௦ சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தப்படத்தின் உண்மையான வாழும் கதாபாத்திரமான காஞ்சனமாலா தான் இப்போது எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார்.
தன்னைப்பற்றிய தவறான தகவல்களை வைத்து படத்தை எடுத்து வருவதாகவும் இந்தப்படம் வெளியானால் சமூகத்தில் தன்னைப்பற்றிய நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படும் என்றும் இதுபற்றி விளக்கம் கேட்க இயக்குனர் விமலுக்கு போன் செய்தால் அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை என கூறும் காஞ்சனமாலா அப்படி ஒருவேளை இந்தப்படம் வெளியானால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டலும் விடுத்துள்ளாராம்.