“சிங்கத்தை வைத்து படம் எடுப்பேன்” – அடுத்த மிரட்டலுக்கு தயாராகும் பிரபு சாலமன்..!


பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகிறது. அதற்கடுத்து தற்போது ‘கயல்’ படத்தை இயக்கி வருகிறார். நல்ல தரமான படைப்பு வர வேண்டுமானால் இந்த இடைவெளி தேவைதான் என்கிற பிரபு சாலமன் ‘கயல்’ படத்தின் இறுதிகட்ட பணியில் பிஸியாக இருக்கிறார்.

“இரண்டு படங்களின் வெற்றியும் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. முதல் போஸ்டர், முதல் டீஸர் இதிலேயே ரசிகனை ஈர்க்க வேண்டும். அப்போதுதான் படத்தை பற்றிய எண்ணம் அவனது மனதில் ஆழமாகப் பதியும்” என்கிற பிரபு சாலமன் “வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ரசிகனை நூறு சதவீதம் முழுமையாக திருப்தி படுத்த வேண்டும். அதற்கு ஆயிரம் சதவீதம் உழைக்க வேண்டும்” என்கிறார்.

‘கயல்’ என்ன மாதிரியான படம் என்று கேட்டால், “சுனாமி தாக்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டது அந்த சுனாமியை இதில் கதைக்கருவாக்கி இருக்கிறேன். இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படம் இல்லை.

திரையில் கயல் படத்தை பார்க்கும் போது மனசு அப்படியே பதைபதைத்து போகும்.. 56 டிராக் இசை படத்தை இன்னும் பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.” என பேச்சிலேயே படத்தின் பிரம்மாண்டத்தை காட்டுகிறார்.

‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’… அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பதாக உத்தேசம் என்று கேட்டால் சற்றும் சிரிக்காமல் பதில் வருகிறது பிரபு சாலமனிடம் இருந்து.. “சிங்கத்தை வைத்து ஒரு புதிய முயற்சி எடுக்க எண்ணம் இருக்கு”.

இமான்-பிரபு சாலமன் காம்பினேசன் வெற்றிகரமாக தொடர காரணம் என்ன என்று கேட்டால், “ஒரே நேர்கோட்டில் ஒரே மாதிரியான சிந்தனையில் இருவருமே பயணிப்பதால் தான் ஹிட் பாடல்களைக் கொடுக்க முடிகிறது. ஹிட் பாடல்கள் படத்திற்கான வெற்றியை நிர்ணயிக்கிறது. அந்த விதத்தில் ஒருவருக்கு ஒருவர் நம்பிகையுடன் இருக்கிறோம்” என்கிறா பிரபு சாலமன் படத்தை ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம் என்கிறார்.

KayalPrabu Solomonகயல்கும்கிபிரபு சாலமன்மைனா