சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..!

பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத் என்பவர் ‘பொறுக்கிஸ்’ என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..

இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, ” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

அது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.

தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்

Porukkisகரு.பழனியப்பன்சுரேஷ் காமாட்சிஜே.கே.ரித்தீஷ்பியூஸ் மனுஷ்பொறுக்கிஸ்மஞ்சுநாத்ராதாரவி