“தனஞ்செயன் மாஸ்டர் பிரைன் ; ‘பாஃப்டா’ ஒரு சீசன் டிக்கெட்” – புகழாரம் சூட்டிய பார்த்திபன்..!

‘பாஃப்டா’ அறிமுக விழாவை இனிதே நடத்தி முடித்திருக்கிறார் யுடிவியின் தென்னிந்திய செயல் அதிகாரி தனஞ்செயன்.. சரி.. அது என்ன ‘பாஃப்டா’..? ‘ப்ளு ஓசன் பிலிம் & டெலிவிஷன் அகாடமி’ (Blue Ocean Film & Television Acadamy) என்பதன் சுருக்கம் தான் இந்த ‘பாஃப்டா’ (BOFTA). படத்தயாரிப்பு துறையில் திறமையும் பல வருட அனுபவமும் வாய்ந்தவருமான தனஞ்செயன் தான் இந்த அகாடமி உருவாக காரணமானவர்.

இந்த அகாடமியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை எழுதுதல், சினிமா தயாரிப்பு, தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் சினிமா ஜர்னலிசம் தொடர்பான அனைத்தையும் நவீன தொழில் நுட்பத்துடன் கற்றுத்தர தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன.

குறிப்பாக இந்த அகாடமியில் படித்துவிட்டு வெளியே செல்பவர்கள், உடனடியாக திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் உரிய பணிகளில் அமர்த்தப்பறும் தகுதியுடன் இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக திரையுலகில் பல வருட அனுபவம் வாய்ந்த கலை வித்தகர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தலைவர் மற்றும் அவரின் கீழ் சினிமா பிரபலங்கள் தங்களது அனுபவங்களை பாடமாக கற்றுத்தர இருக்கிறார்கள்.

டைரக்சனுக்கு இயக்குனர் மகேந்திரனும், திரைக்கதை பிரிவிற்கு இயக்குனர் கே.பாக்யராஜும், நடிப்பிற்கு நாசரும், ஒளிப்பதிவிற்கு மது அம்பாட்டும், படத்தொகுப்பிற்கு லெனினும், சினிமா இதழியல் படிப்பிற்கு கார்ட்டூனிஸ்ட் மதனும் திரைப்பட தயாரிப்புக்கு தயாரிப்பாளர் டி.சிவாவும் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புக்கு குட்டி பத்மினியும் தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளார்கள்.

 

வரும் ஜூன் மாதம் இருந்து வகுப்புகள் துவங்க இருக்கின்றன. இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை மியூசிக் அகாடமியில், திரையுலக பிரபலங்கள் மத்தியில் .நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் மகேந்திரன், கே.பாக்யராஜ், பார்த்திபன், சுந்தர்.சி, எஸ்.பி.ஜனநாதன், சசி, கே.ராஜேஸ்வர், ஏ.எல்.விஜய், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.எஸ்.பிரசன்னா உட்பட பலரும் நாசர், மனோபாலா, மோகன்ராம், சித்ரா லட்சுமணன், குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி மற்றும் தயாரிப்பாளர் டி.சிவா உட்பட பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்..

 

இந்த விழாவில் முதலில் பேசிய இயக்குனர் மகேந்திரன், “படிக்க வர்றவங்ககிட்ட பாடம் நடத்தமாட்டேன்.. கேள்வி கேட்பேன்.. நானுன் கத்துக்குவேன்.. இதுவும் கொடுக்கல் வாங்கல் மாதிரிதான்” என்றார். இயக்குனர் பாக்யராஜ், “சினிமாவுல சாதிக்கணும்னு வர்றவங்க, வர்றப்பவே ஸ்டாக்கோட வரணும்னு அவசியம் இல்ல.. வந்து ஒவ்வொண்ணா கத்துக்கிடலாம்” என்றார்.

 

இயக்குனர் பார்த்திபன் பேசும்போது, “இந்த , ‘பாஃப்டா’ உருவானதற்கு காரணம் நிச்சயம் தனஞ்செயனின் மாஸ்டர் பிரைன் தான் காரணம்.  சினிமா என்ட்ரிக்கான சீசன் டிக்கெட் தான் இந்த ‘பாஃப்டா’.. பொதுவா சிற்பி தான் சிற்பங்களை செதுக்குவான். ஆனா இந்த ‘பாஃப்டா’வோ சிற்பிகளை செதுக்கப்போகுது. அதுமட்டுமல்ல இந்த ‘பாஃப்டா’ புண்ணியத்துல நாங்களும் வர்றவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்குவோம்” என தனஞ்செயனுக்கும் ‘பாஃப்டா’வுக்கும் புகழாரம் சூட்டினார்.

DhananjayanParthibanகே.பாக்யராஜ்டி.சிவாதனஞ்செயன்நாசர்பாஃப்டாபார்த்திபன்மகேந்திரன்மது அம்பாட்