படங்கள் வெற்றி பெறுவதும், அதற்காக சக்சஸ் மீட் வைத்து கொண்டாடுவதும் சகஜம் தான். ஆனால் இன்று பாபநாசம் படக்குழுவினர் தங்களது வெற்றிவிழாவை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய விதம் ரொம்பவே புதுமையாக இருந்தது. அதுமட்டுமல்ல, படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களையும் கௌரவப்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது.
வழக்கமாக ஏதோ ஒரு ஸ்டார் ஹோட்டலில் அல்லது பிரசாத் லேபில் தான் இதுபோன்ற சக்சஸ் மீட்டை நடத்துவது வழக்கம். ஆனால் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ ஆடிட்டோரியத்தில் நடத்துகிறார்கள் என்றதுமே, இது புதுசா இருக்கே என நினைத்துக்கொண்டே அதில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு அங்கே போனதும் தான் அதற்கான காரணம் புரிந்தது.
அதாவது பாபநாசம் படத்தில் இடம்பெற்ற கமலின் வீடான ‘ராணி இல்லம்’, எம்.எஸ்.பாஸ்கரின் டீக்கடை மற்றும் மிக முக்கிய இடமான காவல் நிலையம் ஆகிய மூன்றையும் மேடையிலே செட் போட்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல, படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் படத்தில் நடித்த அதே உடைகளில், கெட்டப்புகளில் வந்திருந்து சில காட்சிகளை நடித்து காட்டியது ரியலி சூப்பர்..
படத்தில் நடித்த தமிழ் நட்சத்திரங்களுடன் இந்த விழாவிற்காக கலாபவன் மணி, ஆஷா சரத், பேபி எஸ்தர் என கேரளாவில் இருந்தும் நட்சத்திர பட்டாளம் தவறாமல் வந்து ஆஜராகிவிட்டனர். பாபநாசத்தின் வெற்றி கொடுத்த மகிழ்ச்சி வந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் தாண்டவமாடியதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
பாநாசம் படத்தின் வெற்றி கமலை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருப்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது. “எல்லோருக்கும் இப்படி ஒரு படமும் கேரக்டரும் கிடைத்துவிடாது. இந்தக்கதையில் நடிக்கும்படி என்னை தூண்டிய மோகன்லாலுக்குத்தான் முதல் நன்றி. என்னை கமல் என்று அழைப்பதைவிட சுயம்பு அல்லது சுயம்புலிங்கம் என்று அழைத்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்” என நெகிழ்வுடன் கூறினார் கமல்.