கமலும் ஜீத்து ஜோசப்பும் தனித்தனியாக மறைத்த ரகசியங்கள்..!

ஒரு படம் ஒரு மொழியில் ஹிட்டாகி பின்னர் பல மொழிகளிலும் ரீமேக்காகி அங்கேயும் ஹிட்டாகும்போதுதான் சிக்கலான ஒரு கேள்வி கேட்கப்படும்.. அதாவது ஒரிஜினல், ரீமேக் இதில் யாருடைய நடிப்பு பெஸ்ட் என்பதுதான் அந்த கேள்வி.. சமீபத்தில் நடைபெற்ற பாபநாசம் பட வெற்றிவிழாவில் கூட கமலும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இப்படி ஒரு தர்ம சங்கடமான கேள்விக்கு ஆளாகி சாதுர்யமாக சமாளித்தார்கள்.

இரண்டு மொழிகளிலும் இந்தக்கதையை இயக்கிய ஜீத்துவிடம், கமல், மோகன்லால் இருவரில் யார் சிறப்பாக நடித்திருந்தார்கள் என நிருபர்கள் கொக்கியை போட்டார்கள். அவரோ இருவரும் தங்களது ஸ்டைலில் தனித்தன்மையுடன் நடித்திருந்தார்கள் என்று சொல்லி சமாளித்தார்.

மேலும், “அப்படி யார் சிறப்பாக நடித்திருந்தார்கள் என எனக்குள்ளே தோன்றினாலும் கூட பாபநாசம் க்ளைமாக்ஸில், கொல்லப்பட்ட்ட அந்தப்பையனின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்கிற ரகசியம் எனக்குள்ளேயே புதைந்து போகட்டும் என்று கமல் சொல்வதுபோல அது என்னிடமே ரகசியமாக இருக்கட்டும்” என்று சமாளித்தார் ஜீத்து.

கமலிடம் இதேபோல மீனா, கௌதமி இருவரில் யார் நடிப்பு பெஸ்ட் என்ற கேள்வி கேட்கப்பட்டதும், அம்பு தன்னை நோக்கி வரும் என்பதை எதிர்பார்க்காத மன்மதன் திகைத்தார். ஆனாலும், “கெளதமியின் நடிப்பில் குறை சொன்னால், அவர் என்னுடன் இருப்பவர் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் மீனாவின் நடிப்பை குறை சொன்னால் அவர் எங்காவது சந்திக்கும்போது முகத்தை திருப்பிக்கொள்வார். அதனால் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்கான பதில் எனக்குள்ளேயே இருந்து விட்டு போகட்டும்” என்று ஜீத்து ஜோசப் பாணியிலேயே சமாளித்தார்.

கமல்கௌதமிஜீத்து ஜோசப்பாபநாசம்மோகன்லால்